'அமரன்' பட குழுவினரை மத்திய அமைச்சர் பாராட்டியிருக்கும் செய்திதான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சிவகார்த்திகேயனின் அமரன் படம் குறித்த செய்தி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் 'அமரன்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது.

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் இடையே காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை.
அமரன் படம்:
மேலும், இந்த படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் அமரன் படம் இதுவரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபலங்கள் பாராட்டு:
இந்த படத்தை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் மட்டுமில்லாமல் பல அரசியல் தலைவர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதோடு இந்த படம் ராணுவ வீரர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் போட்டு காண்பிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் சமீபத்தில் வேலூர் அடுத்துள்ள ராணுவப் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு அமரன் திரைப்படம் இலவசமாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்து பலரும் பாராட்டி இருந்தார்கள்.
மத்திய அமைச்சர் பாராட்டு:
இந்நிலையில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சில முக்கிய படக் குழுவினருடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங்கை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது ராஜநாத் சிங், அமரன் படம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டியதாக பட குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேஜர் முகுந்தனின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் தேசப்பற்றோடும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இந்த படம் இருப்பதால் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக படக்குழு தெரிவித்து இருக்கிறது.
Actor Mr. @Siva_Kartikeyan , Producer Mr. #Mahendran, and Director Mr. @Rajkumar_KP had the privilege of meeting the Honourable Defence Minister, Mr. @rajnathsingh , today. The Honourable Minister extended his congratulations to the Amaran team for the film's remarkable success.… pic.twitter.com/nZiqOIl40B
— Raaj Kamal Films International (@RKFI) November 29, 2024
சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த கௌரவம்:
இதேபோல் சமீபத்தில் கூட, அமரன் படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பை பாராட்டி ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் கௌரவித்து இருந்தது. இந்த பயிற்சி மையத்தில்தான் முகுந்து வரதராஜன் பயிற்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் முகுந்து வரதராஜன் இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற காட்சிகள் எல்லாம் படத்தில் இடம்பெற்று இருந்தது. இது தொடர்பாக ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சிவகார்த்திகேயனை பாராட்டி வாழ்த்து தெரிவித்து பதிவு போட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.






