தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பைசன். இந்த படத்தில் பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ். கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இயக்குனர் அமீர் அவர்கள் மதுரையில் பைசன் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், இதை நான் வெறும் சினிமாவாக கடந்து போக விரும்பவில்லை. நம்முடைய சமூகத்தில் இருக்கிற பிரச்சனையை பேசும் படமாக தான் பார்க்கிறேன். அது சரியாகவும் வந்திருக்கிறது. ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது. எந்த சமூகத்தாரரும் குறை சொல்லாத அளவுக்கு இந்த படம் அமைந்திருப்பது மிகப்பெரிய வெற்றியாக தான் நான் பார்க்கிறேன் என்றார்.
அமீர் அளித்த பேட்டி:
உடனே அரசியலில் நடிகர்கள் வரும்போது அவர்களுக்கு ஆதரவாக நடிகர்கள் வருவார்களா? என்று அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு அமீர், அப்படியெல்லாம் வர மாட்டார்கள். எம்ஜிஆர் வரும்போது அவர் பின்னாடி எல்லா நடிகர்களும் வரவில்லை. விஜயகாந்த் வரும் போதும் அப்படி யாரும் வரவில்லை. அவரவர் தனியாக வந்து அவரவர் தனியாக அடையாளங்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நடிகர்களும் சமூகத்தில் ஒரு அங்கம் தான். பெரும்பான்மையான மக்களுடைய அன்பை பெற்றவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நாம் சொல்லக்கூடாது.
View this post on Instagram
எம்ஜிஆர் பற்றி சொன்னது:
லட்சக்கணக்கான மக்களின் அன்பை பற்றி எம்ஜிஆரை அண்ணா ஒரு கருவியாக எடுத்துக் கொண்டார். அந்த வாளை எடுத்துக் கொண்டு அண்ணா என்ற போர் வீரன் ரொம்ப சரியாக பயன்படுத்தியதாக நான் பார்க்கிறேன். எம்ஜிஆர் மூலமாக திராவிட சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தார். அந்த வீரன் சரியாக இருந்ததால் அந்த வாளும் சரியாக பயன்படுத்தப்பட்டது. அதேபோல் ஒரு வாள் இப்போது கிளம்பி இருக்கிறது.

விஜய் அரசியல்:
எம்ஜிஆருக்கு பிறகு ஒரு கூர்மையான ஆயுதம் கிளம்பி இருக்கிறது. ஆனால், அந்த வாளை பயன்படுத்துவதற்கான சரியான போர் வீரன் இல்லை என்பது என்னுடைய கருத்து. அந்த வாள் நல்லவர்கள் கையில் கிடைத்தால் நன்றாக பயன்படும். கெட்டவர்கள் கையில் கிடைத்தால் தவறாக போய்விடும். அந்த வாளை யார் பயன்படுத்த போகிறார்கள்? நல்லவர்களாக, கெட்டவர்களா என்பதை 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிவு செய்யும் என்று கூறியிருக்கிறார்.






