சூர்யாவின் மிக வித்தியாசமான நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அமீர். முதல் படத்திலேயே மென்மையான காதலையும் காதல் தோல்வியை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் மிக சிறப்பாக அமீர் சொன்ன விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. மேலும் மௌனம் பேசியதே திரைப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டராக அமைந்தது. அதைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளியான ராம் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக பெயர் பெற்றார்

இந்த நிலையில் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கிய இந்திய அளவில் மிகப் பெரிய கவனத்தை பெற்றதோடு அப்படம் தேசிய விருதுகளையும் வென்றது. மதுரை மண்ணின் மண்வாசனை மாறாமல் ராவாக எடுக்கப்பட்ட பருத்திவீரன் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கார்த்தியின் திரை வாழ்க்கையில் இந்த படம் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்தப் படத்தில் பிரியா மணி முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகையாக தேசிய விருதையும் வென்றார். பருத்திவீரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பெரும் சர்ச்சையாகி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

Advertisement

பருத்திவீரனுக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய வலி இருக்கிறது:-

விகடனில் பருத்திவீரனின் திரைக்கதை புத்தகம் வெளிவந்தபோது அதன் முன்னுரையில் இத்திரைப்படத்தை நான் எடுத்திருக்கவே கூடாது என்று குறிப்பிட்டுள்ளேன். அப்படம் எனக்கு அங்கீகாரம், அடையாளத்தை கொடுத்தாலும் ஒரு மனிதனாய் எனக்கு எந்த சந்தோஷத்தையும் தரவில்லை வலிகளை மட்டுமே தான் தந்தது என்று சொல்லவேண்டும். அந்த வலிகளை பற்றிக் கூறினால் அதற்கு காரணமானவர்களை பற்றி கூறவேண்டும். அவர்களின் பின்புலத்தை கூறவேண்டும். அதனால் அதைப் பற்றி பேச வேண்டாம். நான் கிராமத்தில் பிறந்து வளரவில்லை என் நண்பர்கள் பலர் கிராம பின்னணியிலிருந்து வந்தவர்கள். அப்படி கிராமங்களுக்கு பயணப்படும் போது அந்த வாழ்வியல் என்னை அப்படியே ஈர்த்துவிட்டது. அந்த மனிதர்கள். அவர்களின் அன்பு அதை வெளிக்காட்டும் விதம் அனைத்தையும் நான் உள்வாங்கி எனக்குள்ளேயே ஒழித்து வைத்திருந்தேன். இதை எல்லாம் நான் சேர்த்து கொண்டுவந்த இடம் தான் பருத்திவீரன். அதற்கடுத்ததாகவும் எனக்குள்ளே பல கிராமத்து கதைகள் வைத்திருந்தேன்.

பருத்திவீரன் தெடார்ந்து ஏன் படம் எடுக்கவில்லை :-

ஆனால் பருத்திவீரனின் வெற்றியினால் தொடர்ந்து அதே போன்ற கதாபாத்திரங்கள் கொண்ட பல கிராமத்து கதைகள் வெளிவர தொடங்கின. சுமார் பத்து வருட காலத்திற்கு இதே போல படங்கள் வெளியாகி மக்களை படாத பாடு படுத்திவிட்டன. இதைக்கண்டு எனக்குள்ளும் ஒரு சோர்வு உண்டாகிறது. நான் மீண்டும் படம் தொடங்காததை கண்டு விமர்சனங்களும் வந்தன.
அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் நான் பருத்திவீரன் எடுத்தது உங்களுக்காக அல்ல, எனக்காக என் ரசிகர்களுக்காவே இத்திரைப்படத்தை எடுத்தேன். அவர்களுடன் நான் என்றும் தொடர்பில் இருப்பேன். அதனால் வேறு ஒரு களத்தில் திரைப்படம் எடுக்க எண்ணி ஆதிபகவனைத் தொடங்கினேன்.

Advertisement

கஷ்டங்களை சொன்னால் அதை அவமானமாகக் கருதுவேன் :-

எல்லோருடைய பார்வையிலும் ஒரு திரைசார்ந்த குருவாக எனக்கு இருப்பவர் பாலா. ஆனால் ஒரு குருவாக நின்று அவர் வழிநடத்தினாரா என்பது கேள்வி தான். அதற்கு முன்பாகவே திரையரங்கை குருவாக ஏற்றுக்கொண்டிருந்தேன். திரைதான் எனக்கு அதிகமாக சினிமா கற்றுக்கொடுத்தது, மனிதர்கள் அல்ல. அதே போல இந்த சினிமாவில் வெற்றிபெற கடந்துவரும் கஷ்டங்களை நான் இதுபோன்ற நேர்காணலில் சொன்னால் அதை அவமானமாகக் கருதுவேன். நான் ஒன்றும் இந்த தேசத்திற்காக கஷ்டப்படவில்லை, இந்த சமூகம் முன்னேற வேண்டும் என்பதற்காகவோ பாடுபடவில்லை. நான் நல்லபடியாக இருக்கவேண்டும், எனக்குள் இருக்கும் சினிமா பார்வையை வெளிக்கொண்டுவர வேண்டும், என்னை வீழ்த்த நினைத்தவர்களுக்கு முன்னால் எழுத்து நின்று காட்ட வேண்டும் என்பதற்காகத்தானே கஷ்டப்பட்டேன். இதை கஷ்டம் என்று சொன்னால் உண்மையாக கஷ்டப்படுபவர்கள் என்ன சொல்வார்கள். இதெல்லாம் எனக்கு வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். பிறர் காயப்படுவதற்காக இதைச் சொல்லவில்லை. என்னுடைய பார்வை இது.

Advertisement

என்னால் என் குடும்பம் பாதிக்ககூடாது :-

பொதுவாக என் குடும்பத்தை பற்றி வெளியே பேசுவதில்லை. எனக்கு கிடைக்கக்கூடிய பாராட்டோ விமர்சனமோ அவர்களின் மீது விழக்கூடாது என்பதுதான் இதற்கான காரணம். முன்பு என் வீட்டில் பல்வேறு பத்திரிகைகளை நான் வாங்குவதுண்டு. ஆனால் பருத்திவீரனுக்கு பின்னால் அதில் வரும் சர்ச்சைகள் விமர்சனங்களால் அவற்றை நிறுத்திவிட்டேன். மேலும் யூ-டியூப்பில் நான் பேசும் அரசியல் சார்ந்த நேர்காணல்கள் வெளியாகும் போதும் சரி, அதில் வரும் கமென்ட்டுகளை படிக்க வேண்டாம் என்றுதான் என் குடும்பத்தினரிடம் சொல்வேன். நான் இவ்வளவு பாதுகாப்பாக இருப்பினும் அவர்களுக்கு அந்தப் பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது. வடசென்னை வெளியானபோது நான் ஆண்ட்ரியாவுடன் நடித்த காட்சிகளால் என் மகனை உடன் படிக்கும் மாணவர்கள் சிலர் மிகவும் கிண்டலடித்துள்ளனர்.


நான் வளர்ந்த சூழலும் என் மகன் வளர்ந்த சூழலும் முற்றிலும் வேறானது. அதை எதிர்கொள்ள முடியாத அவன் தன் தலைமை ஆசிரியரிடம் சென்று அழுது முறையிட்டு இருக்கிறான். “பிறருக்கு வேண்டுமானால் அவர் நடிகராக இருக்கலாம் ஆனால் எனக்கு அவர் அப்பா. அவரை கிண்டல் செய்யட்டும். ஆனால் என் முன்னே வேண்டுமென்றே வந்து செய்வது ஏன்? இவ்வாறு அவன் கேட்டுள்ளான். இவை அனைத்தையும் அந்த ஆசிரியர் என்னை அழைத்து கூறுகிறார். மேலும் அவரே என் மகனுக்கு அறிவுரையும் அளிக்கிறார். பிரபலங்களின் பிள்ளைகள் இது மாதிரியான விஷயங்களை சந்திக்காமல் இருக்கவே முடியாது. அவற்றை எதிர்கொண்டு கடந்து போக நீதான் பழகிக்கொள்ள வேண்டும் என்றார். இதுதான் நான் சொல்லும் காரணம். எனக்கு மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு மகன் அவ்வளவுதான் சொல்லுவேன். இந்த ஆடம்பரத்தில் அவர்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்பதுதான் என் எண்ணம்.

Advertisement