தமிழ் சினிமா உலகில் பிரபலமாக அறியப்பட்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் இராசு மதுரவன். இவர் தமிழ் சினிமா உலகில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படங்களில் ஒன்றான மாயாண்டி குடும்பத்தார் படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் அண்ணன் தம்பி பாசம், குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் மூலம் இவர் குடும்ப ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் என்று சொல்லலாம். இந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதை அடுத்து இவர் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம் போன்ற படங்களை கொடுத்திருந்தார். அதற்குப் பின் இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் தன்னுடைய 49 வயதிலேயே இறந்துவிட்டார். காரணம், இவருக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்ததால் இவருக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டிருந்தது.
இதனால் இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்து விட்டார். இவருடைய இறப்பு பலருக்கு தெரியாது என்று சொல்லலாம். மேலும், இன்றோடு இவர் இறந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இன்று இவருடைய நினைவு தினம். இந்நிலையில் இது தொடர்பாக ராசு மதுரவனின் மனைவி பவானி பேட்டியில், என்னுடைய கணவர் உயிரோடு இருந்திருந்தால் எனக்கு மகள்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது. தினம் தினம் எங்களுடைய வாழ்க்கைப் போராட்டத்தில் தான் சென்று கொண்டிருக்கின்றது. நாங்கள் 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். ஒன்னுமே இல்லாமல் தான் எங்களுடைய வாழ்க்கையை தொடங்கினோம். என்னுடைய கணவர் வடிவேலு சாருக்கு காமெடி டிராக் எழுதுவார். அதில் வர வருமானத்தை வைத்துதான் வீட்டு வாடகை எல்லாம் கட்டிட்டு இருந்தோம்.
ராசு மதுரவன் குறித்து சொன்னது:
அதற்குப் பிறகுதான் அவர் பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக போன்ற படங்களை எல்லாம் இயக்கி இருந்தார். இந்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. என்னுடைய ரெண்டு பொண்ணுக்கும் நல்ல கல்வியை கொடுக்கணும் என்று அவர் நினைத்தார். நல்லாவும் படிக்க வைத்தார். நன்றாகத்தான் எங்களுடைய வாழ்க்கை சென்றிருந்தது. திடீரென்று அவருக்கு புற்றுநோய் வந்தது. ஆஸ்பிட்டல் எல்லாம் போய் அவர் மீண்டும் வந்தார். ஆனால், இறப்பதற்கு முன் இரவு அவர் எங்களிடம் நம்பிக்கையோடு பேசியிருந்தார். ஆனால், எங்களுடைய நம்பிக்கை எல்லாம் பொய் ஆகிவிட்டது.
கணவர் இறப்பு:
என் கணவருக்கு இப்படி ஆகும் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. நாங்கள் சேர்த்து வைத்திருந்தது எல்லாமே அவருடைய மருத்துவ செலவுக்கு சரியாகிவிட்டது. அவர் இறக்கும்போது எங்க கிட்ட ஒண்ணுமே இல்லை. நான் என்னுடைய இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மதுரைக்கு வந்து விட்டேன். பெரிய பொண்ணு நேசிகா பிளஸ் டூ படிக்கிறாள், சின்ன பொண்ணு பத்தாவது படிக்கிறாள். அப்பா இல்லாத ஏக்கம் அவர்களுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அப்பா மேல அதிக பாசம். அவர் இருக்கும் போது நான் வேலைக்கு போனதில்லை. அந்த அளவிற்கு என்னை இராணி போல் பார்த்துக் கொண்டார்.
தற்போதைய நிலைமை:
என்னோட மாமியார் இப்பவும் என்மேல் பாசத்தோடு தான் இருக்காங்க. அவங்களும் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவங்க தான். என்னுடைய கொழுந்தனார் வீட்டில் திண்டுக்கல இருக்கிறாங்க. எல்லோருமே விவசாயம் தான் செய்றாங்க. என்னுடைய குடும்பத்தை நடத்த பொருளாதார ரீதியாக நாங்கள் ரொம்ப கஷ்டப்படுகிறோம். உதவி செய்ய எங்களுக்கு யாருமே இல்ல. ஒரு பிரைவேட் ஸ்கூலில் டீச்சராக வேலைக்கு போய் கொண்டிருக்கிறேன். எனக்கு மாசம் 12,000 சம்பளம் . அதில் தான் எங்களுடைய சாப்பாடு செலவு, பொண்ணுங்களோட ஸ்கூல் பீஸ் என்று வாழ்க்கை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம்.
சினிமா குறித்து சொன்னது:
இதுவரைக்கும் எங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை. ஹாஸ்பிடலில் இருக்கும்போது கூட சினிமாவிலிருந்து யாருமே வரவில்லை. அவருடைய இயக்கத்தில் எத்தனையோ பேர் நடிச்சிருக்காங்க ஆனா யாருமே எங்களை தொடர்பு கொண்டு எப்படி இருக்கீங்கன்னு கூட நலம் விசாரிக்கவில்லை. என்னுடைய கணவர் உயிரோடு இருந்திருந்தால் எங்களுக்கு மதிப்பே வேற. இதுதான் சினிமா உலகம்ன்னு புரிஞ்சுகிட்டேன். நான் அவர்களிடம் எதையுமே எதிர்பார்க்கவில்லை. என் கணவர் பொண்ணுங்களை நல்லா படிக்க வைக்கணும் என்று ஆசைப்பட்டார். அவங்களோட கல்விக்காக யாராவது உதவினால் போதும் அவர்கள் படித்து முன்னேறினால் போதும் என்று கண்கலங்கி கூறியிருக்கிறார்.