மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அமைதி பேரணியில் கலந்து கொண்டு இருந்த நிலையில் மயக்கம் அடைந்து உயிரிழந்தார் திமுகவின் மாநகராட்சி கவுன்சிலர் சண்முகம் (62). இவர் சென்னை மாநகராட்சி 146-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து பணியாற்றி வந்தவர் ஆலப்பாக்கம் சண்முகம் (62). தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ள இவர் கலைஞர் கருணாநிதி நினைவு அமைதி பேரணியில் இன்று பங்கேற்க காரில் வந்தார்.
அண்ணா சிலையில் இருந்து கடற்கரை நோக்கி கட்சி நிர்வாகிகளுடன் நடந்து சென்றார். கலைவாணர் அரங்கம் அருகில் சென்று கொண்டிருத்த போது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவர் தனது கார் டிரைவரை தொடர்பு கொண்டு உடனே வரும்படி கூறி உள்ளார். டிரைவர் வருவதற்குள் சண்முகம் சாலையில் மயங்கி விழுந்தார். பேரணியில் உடன் சென்ற கட்சி தொண்டர்கள் அவரை உடனே அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சண்முகத்தின் உடல் அவரது சொந்த ஊரான ஆலப்பாக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. மாரடைப்பால் மரணம் அடைந்த ஆலப்பாக்கம் சண்முகத்தின் உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மறைந்த சண்முகத்திற்கு ஏற்கனவே இருதய அறுவை சிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் நேற்று நடந்த கலைஞர் மாரத்தான் ஓட்டத்திலும் கலந்து கொண்டு 5 கி.மீ. தூரம் நடந்து சென்றுள்ளார். இந்த நிலையில் தான் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
கவுன்சிலர் சண்முகத்திற்கு சுமதி என்ற மனைவியும், தினகர் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தினகர் தி.மு.க. இளைஞர் அணியில் பொறுப்பு வகித்து வருகிறார். மறைந்த சண்முகத்தின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். நாளை ஆலப்பாக்கம் இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சியானது கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.