தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகரும் மருத்துவருமான சேது ராமன். நேற்று (மார்ச் 26) இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்தின் மூலம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் சேது ராமன்.

மருத்துவர் மற்றும் நடிகர் என்று இரண்டு துறையில் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஹானா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார் மேலும் சேதுராமனுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதுகெலும்பில் ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

சரும நிபுணரான சேதுராமன் வெறும் மருத்துவராக மட்டும் இல்லாமல் அடிக்கடி மக்களுக்கு தேவையான சில மருத்துவ அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். இவரது சமூக வலைதளப் பக்கத்தில் மக்களுக்கு பயனுள்ள பல்வேறு மருத்துவ குறிப்புகளையும் அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சேதுராமன், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோ தற்போது சேதுராமன் பேசிய கடைசி வீடியோ என்ற பெயரில் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் டாக்டர் சேதுராமன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்து விட்டார் என்ற ஒரு வதந்தியும் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து சேதுராமனின் நண்பரும் அவரை போலவே மருத்துவரவுமான டாக்டர் அஸ்வின் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.

Advertisement

Advertisement

அதில், என்னுடைய வாழ்க்கை இனி சேது இல்லாமல் எப்போதும் போல இருக்கப்போவது இல்லை. என்னுடைய வாழ்க்கையில் மிகவும் வலி நிறைந்த நாள். 30 ஆண்டுகள் நண்பராகவும் சகோதரராகவும் இருந்தோம். இந்த உலகம் குறித்தும் இளைஞர்கள் குறித்தும் நாங்கள் எப்போதும் நல்லவற்றையே கொடுக்க வேண்டும் என்ற பார்வையோடு இருந்தோம். என்னை விட்டு பிரிந்து என்னை உன்னுடன் எடுத்துச் சென்று என்னை ஒன்றும் இல்லாதவனாக மாற்றிவிட்டாய். தற்போது அனைவருக்கும் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அவர் மாரடைப்பால் காலமானாரே தவிர கொரோனாவால் இல்லை. எனவே, இந்த நேரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்

Advertisement