இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள படம் ஜெய் பீம். இந்த படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்து வருகிறது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்துள்ளது. இந்நிலையில் நீதியரசர் சந்துரு அவர்கள் ஜெய் பீம் படம் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நான் மாணவர் பருவத்தில் இருக்கும்போதே அரசியலில் ஆர்வம் உள்ளவனாக இருந்தேன். அப்போது நான் பொதுக்கூட்டம் நடக்கும் இடங்கள் எல்லாம் சென்று அவர்கள் பேசுவதை கேட்பேன். அவர்கள் சமுதாயம் குறித்து பேசுவது எனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பின் எனக்கு சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. மேலும், அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நாட்கள் செல்ல செல்ல தான் தெரிந்து கொண்டேன். அதற்கு அரசியலில் இருந்து தான் சமூக சேவையை செய்ய வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. பிறகு தான் நீதிபதி பதவியில் இருந்து செய்யலாம் என்று முடிவு செய்து நான் நீதிபதி ஆனேன். இந்தத் தேசத்திற்கான சேவையை எங்கிருந்தாலும் செய்யலாம் என்று நினைத்து தான் நானும் செய்ய தொடங்கினேன். பின் நான் இடதுசாரி அமைப்புகளிடம் இருந்து தான் நான் சமூக சேவை செய்ய தொடங்கினேன். பிரிட்டிஷ் காலத்திலேயே நாகரீக மக்களை தனியாகவும், பழங்குடி மக்களை தனியாகவும் தான் பிரித்து வைத்தார்கள்.

Advertisement

பின் காலம் செல்லச் செல்ல மீண்டும் அதே மாதிரி தான் வைத்து வருகிறார்கள். அவர்களை ஒரு அருங்காட்சியத்தில் பார்க்கிற பொருளாகத்தான் பார்க்கிறார்கள். இப்படி காட்சிப் பொருளாக இருக்கும் இந்த இருளர் மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை தான் ஜெய் பீம் படத்தில் சொல்லியிருக்கிறார்கள். பழங்குடி மக்களை குற்றப் பரம்பரையாகவே காலனி அதிகாரத்தில் இருந்து தற்போது இருக்கும் சுய ஆட்சி அதிகாரம் வரை பார்த்துக் கொண்டு வருகிறது. இதை உருவாக்கியவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் தான். ஒரு இடத்தில் குற்றம் நடக்கிறது என்றால் அதற்கு அந்த குற்றப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தான் குற்றவாளி என்று எந்த ஒரு விசாரணையும் இல்லாமல், ஆதாரமில்லாமல் அவர்களுக்கு தண்டனை வழங்குவார்கள்.

அவர்களுக்கு என்று ஒரு ரேஷன் கார்டு, அடையாள அட்டை, ஒரு சொந்தமான நிலம் இருந்தால் இந்தப் பிரச்சனையெல்லாம் வராது. இதெல்லாம் இல்லாததனால் தான் அவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். மேலும், இருளர்கள் குற்றம் செய்பவர்கள் என்று கருதுகிறார்கள். ராஜாக்கண்ணு வழக்கு நடந்து இருக்கும் போது கூட அவர்களுக்கான அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கூட அறிவித்திருந்தார்கள். ஜெய்பீம் படத்தில் சொல்லப்பட்டது செங்கேணி, ராஜாக்கண்ணு ஆகிய இரண்டு பேருடைய பிரச்சினை மட்டுமில்லை. ஒட்டுமொத்த சமூகத்திற்கு நடக்கும் பிரச்சனை தான்.

Advertisement

அவர்களுடைய பிரச்சனையை படத்தில் சொன்னது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் தற்போது மக்கள் மத்தியில் இருளர் பிரச்சனைகளை எளிதாக கொண்டு செல்ல கூடிய ஒரு தளமாக சினிமா உள்ளது. அந்த வகையில் ஜெய்பீம் படத்தில் பழங்குடி மக்கள் பற்றி சொல்லியது எனக்கு ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. படத்தில் சூர்யா என்னுடைய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது சந்தோஷமாக உள்ளது. அவர் என்னைப்பற்றி என்னுடைய வீட்டில் கேட்டு தெரிந்தும், சில விஷயங்களை விசாரித்தும் தான் நடித்தார். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அது தற்போது வெற்றி கண்டது சந்தோஷமாக இருக்கிறது.

Advertisement

இந்த படத்திற்காக இரண்டு வருஷமாக ஞானவேல் உழைத்தார். உயர்நீதிமன்றம் மாறியே செட் போட்டார்கள். ஒரு சில விஷயங்கள் மட்டும் தான் மாறியது. மற்றபடி அப்படியே உயர்நீதிமன்றத்தில் இருக்கிற மாதிரி தான் இருந்தது. இதற்காக செலவு நிறைய ஆனது. அதோடு உயர்நீதிமன்றத்தில் குழந்தைகள் விளையாடுவது எல்லாம் பண்ண மாட்டார்கள். இது வந்து சினிமாவுக்காக கொண்டு வந்தது. ஆனால், நான் என்னுடைய கோர்ட்டில் குழந்தைகளை அனுமதித்தேன். அதை கேள்விப்பட்டு தான் ஞானவேலு அதை படத்தில் கொண்டு வந்தார். படம் பார்த்து காந்தி உடைய பேரன் கோபாலகிருஷ்ணன் காந்தி அவர்கள் பாராட்டினார். அவர் மேற்கு வங்காள மாநிலத்தின் கவர்னர் ஆவார்.

பல பிரபலங்கள் படத்தை பார்த்து பாராட்டினார்கள். எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இந்தப் படத்தின் மூலம் இருளர் வாழ்க்கையில் பல மாற்றங்கள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு முதற்படியாக சூர்யா அவர்கள் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளார். அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் செய்வதற்கான வாய்ப்புகள் இதன் மூலம் நிறைய கிடைக்கும் என்று நம்புகிறேன். முதலமைச்சரும் இந்த படத்தை பார்த்து கவலைப்பட்டார். அவருடைய மனதிலும் இந்த படம் தாக்கத்தை ஏற்படுத்தியதால் இவரும் எதிர்காலத்தில் அவர்களுக்கான திட்டம் போட்டு ஏதாவது உதவிகள் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisement