ஏ. ஆர்.ரஹ்மான் குறித்து மோகினி டே வெளியிட்டிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே ஏ. ஆர்.ரஹ்மானின் விவாகரத்து குறித்த செய்திகள் தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மான். இவர் இசையமைத்த முதல் படமான 'ரோஜா' படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானது தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு இவர் இசையமைத்த ' ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக இவருக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது நாம் அறிந்ததே. இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் இவரின் விவாகரத்துச் செய்தி திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஏ. ஆர்.ரஹ்மான் விவாகரத்து:
அதாவது, சமீபத்தில் ஏ. ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா, திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து நான் ரஹ்மானை பிரிந்து செல்வது கடினமான முடிவு தான். இத்தனை வருடங்கள் வாழ்க்கையை நடத்திய பிறகு சமீபகாலமாக எங்களுக்குள் வலியும் கவலையும் அதிகமாகின. பதட்டங்கள் உருவாகி ஒரு தீர்க்க முடியாத இடைவெளி உருவாகி இருக்கின்றன. இந்த இடைவெளியை எங்களால் நிரப்ப முடியவில்லை. அதனால் கடுமையான மனவலியில் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

விவாகரத்து குறித்து எழுந்த சர்ச்சை:
அதைத்தொடர்ந்து ஏ. ஆர்.ரஹ்மான், தனது மனைவி சாய்ரா பானுவின் அறிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் விவாகரத்துச் செய்தியை உறுதி செய்து இருந்தார். ஏற்கனவே சமீப காலமாக சினிமா பிரபலங்களின் விவாகரத்துச் செய்தி தான் இணையத்தில் அதிகமாக வைரல் ஆகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஏ. ஆர்.ரஹ்மானின் விவாகரத்து செய்தி பலருக்குமே பேரிடியாக இருந்தது. அதுமட்டுமில்லாமல், ரஹ்மானின் இசைக்குழுவில் இருக்கும் பெண் கலைஞர் ஆன மோகினி டே என்பவர் தன்னுடைய கணவரை பிரிய இருப்பதாக அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார்.
சாய்ரா பானு ஆடியோ:
இதனால் ரஹ்மானுக்கும் அந்தப் பெண் கலைஞருக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், அதனால்தான் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் வதந்திகள் வெளியாகியது. அதோடு இவர்கள் இருவரையும் தொடர்பு படுத்தி பல செய்திகள் வெளியே வந்து கொண்டிருந்தது. மேலும், இது போன்ற வதந்திகள் பரப்பும் வீடியோக்கள் மற்றும் செய்திகளை உடனடியாக நீக்க வேண்டும், இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஹ்மான் சார்பில் அவரது வழக்கறிஞர் பதிவு போட்டிருந்தார். அதோடு ரஹ்மான் குறித்து தவறாக வதந்திகளை பரப்ப வேண்டாம். அவர் மிகவும் உயர்ந்த மனிதர் என்று அவரது முன்னாள் மனைவி சாய்ரா பானுவும் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
View this post on Instagram
மோகினி டே வீடியோ:
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மோகினி டே தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், 'எனக்கு ரோல் மாடலாக பலர் இருக்கிறார்கள். எனது வளர்ச்சியில் அவர்களின் பங்கு முக்கியமானது. அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானும் எனக்கு ஒரு ரோல் மாடல். அவர் எனக்கு தந்தை மாதிரி. அவருக்கு என் வயதில் ஒரு மகளும் இருக்கிறார். அவருடன் கிட்டத்தட்ட 8 வருடங்களாக பேஸிஸ்ட்டாக பணியாற்றி இருக்கிறேன். எங்களுக்குள் பரஸ்பர மரியாதை இருக்கிறது. அதனால் தயவு செய்து எங்கள் தனிப்பட்ட விஷயங்களுக்குள் மரியாதை கொடுங்கள் என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ தான் வைரல் ஆகி வருகிறது.






