கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் நீயா நானா நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று வைரலானது. அதில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற காவலாளியின் மகள் அழகு லட்சுமிக்கு மூன்று முறையும் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வீடியோ வெளியானதை அடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் கூட எம்பிபிஎஸ் சீட் கிடைக்காதா என்ற மிகப்பெரிய கேள்வி பலரின் மனதிலும் எழுந்தது. யார் இந்த அழகு லட்சுமி ? கோவை சொக்கம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் இவர் தனியார் ஓட்டல் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகளான அழகு லட்சுமிக்கு டாக்டராக வேண்டும் என்ற கனவு. பள்ளிப் பொதுத்தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு 1120 மதிப்பெண் எடுத்த அழகு லட்சுமி கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.

Advertisement

அப்போது நடைபெற்ற நீட் தேர்வில் 202 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறார். அப்போது அவருக்கு எம்பிபிஎஸ் படிப்புக்கு பதிலாக பல் மருத்துவ படிப்பிற்கான சீட் கிடைத்துள்ளது. ஆனால் அவர் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசையால் பல் மருத்துவ படிப்பில் சேரவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டும் நீட் தேர்வுக்காக ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து கடுமையாக படித்து வந்துள்ளார் அழகு லக்ஷ்மி. பின்னர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 316 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாவது தேர்விலும் தேர்ச்சி அடைந்து இருக்கிறார். ஆனால் அப்போது இவருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கவில்லை. பின்னர் மூன்றாவது முறையாக நீட் தேர்வை எழுதி 420 மதிப்பெண்களை பெற்று இருக்கிறார். ஆனால், அப்போதும் இவருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்காததால் மனமுடைந்து போன அழகு லட்சுமி உக்ரேன் நாட்டில் டாக்டர் படிப்பை படித்து வருகிறார் .

முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ள இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துவிடும் என்பது உண்மை இல்லை. நான் மூன்று முறை தேர்ச்சி பெற்றும் எனக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கவில்லை. நீட் தேர்வுக்கான போட்டிகள் அதிகம் இருக்கிறது. எனவே, அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கு தான் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டால் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துவிடும் என்பது எல்லாம் உண்மை இல்லை என்று கூறியிருக்கிறார் அழகு லட்சுமி.

Advertisement
Advertisement