தசாவதாரம் அவதார் சிங்கை போல பிரபல பஞ்சாப் சிங்கருக்கு நேர்ந்த சோகம் - துப்பாக்கியால் சுட்டு கொலை (பின்னணி என்ன ? )
இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் தசாவதாரம். இந்த படத்தில் கமலஹாசன் மாறுபட்ட 10 வேடங்களில் நடித்திருந்தார். அதில் கமலஹாசன் அவதார் சிங் என்ற கதாபாத்திரத்தில் பஞ்சாபி பாடகர் வேடத்தில் நடித்திருப்பார். மேடையில் பாடிக் கொண்டிருக்கும்போது கமலஹாசன் இறப்பது போல் காண்பிப்பார்கள். இந்நிலையில் அதே பாணியில் பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாப் பாடகர் இறந்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாப் பாடகர் சித்து மூஸ் வாலா.
தற்போது அவருக்கு 28 வயதாகிறது. இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். சித்து மூஸ் வாலாவின் இயற்பெயர் சுப்தீப் சிங் சித்து. கடந்த 1993ம் ஆண்டு மூஸ் வாலா என்ற கிராமத்தில் பிறந்தவர். பஞ்சாபில் பிரபல பாப் பாடகராக வலம் வந்தவர். மேலும், இவரது பாடல்கள் பெரும்பாலும் சர்ச்சைக்கு பெயர் போனவை. அதிலும் 2019ஆம் ஆண்டு வெளியான அவரது பாடலான 'ஜட்டி ஜியோனே மோர் தி பண்டூக் வார்கி' என்ற பாடல் 18ஆம் நூற்றாண்டைச் சேந்த சீக்கிய போர் வீரர் மாய் பாகோவை மோசமாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது.
இதையும் பாருங்க : Walking Stick உதவியுடன் நடந்து வந்து பிரம்மாண்ட நிகிழ்ச்சியை தொகுத்து வழங்கிய DD - என்ன ஒரு டெடிகேஷன்.
சித்து மூஸ் வாலா குறித்த தகவல்:
இதனையடுத்து அவர் அதற்காக மன்னிப்பு கேட்டு இருந்தார். பின் கடந்த மாதம் பலி ஆடு என்ற பாடலை இவர் பாடி இருந்தார்.அதில் ஆம் ஆத்மி கட்சியையும், அதன் ஆதரவாளர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து துரோகி என்று கூறியிருந்தார். அதுமட்டும் இல்லாமல் துப்பாக்கி கலாசாரம், கேங் கலாசாரம் உள்ளிட்டவற்றை புகழந்து பாடுகிறார் என்று சித்து மூஸ் வாலா ஏற்கனவே பல சர்ச்சையில் சிக்கி இருந்தார். பாடல்கள் மூலம் வன்முறையை தூண்டுவதாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
சித்து மூஸ் வாலாவின் சர்ச்சை:
அதோடு கொரோனா சமயத்தில் துப்பாக்கியால் சுட்டதாக அவர் மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இப்படி சித்து பலசர்ச்சைகளில் சிக்கி இருந்தவர். மேலும், சித்து மூஸ் வாலா பாடகர் மட்டுமில்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இவர் கடந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை வாபஸ் செய்து இருந்தது.
சித்து மூஸ் வாலா இறப்பு:
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் 420 விஐபிக்களின் பாதுகாப்பை வாபஸ் பெறுவதற்கான உத்தரவை அந்த மாநில அரசு பிறப்பித்து இருந்தது. இதனால் சித்து மூஸ் வாலாவுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் மான்சா மாவட்டத்தில் நேற்று காரில் சென்று கொண்டிருந்த சித்து மூஸ் வாலாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு இருந்தனர். இதில் அவருடன் இருந்த இரண்டு பேரும் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்து இருந்தார்கள். பின் காவல்துறையினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
பஞ்சாப் முதல்வர் சொன்னது:
ஆனால், வழியிலேயே சித்து மூஸ் வாலா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சித்து மூஸ் வாலா இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், பஞ்சாப் முதல்வர் ரசிகர்களை அமைதியாக இருக்கும்படியும், குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது எனவும் கூறி இருந்தார். சித்து மூஸ் வாலாவை எதற்கு சுட்டார்கள்? சுட்டது யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.