தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் சந்தானம். இவருடைய நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் சபாபதி. இந்த படத்தை ஸ்ரீனிவாசராவ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானத்துடன் எம் எஸ் பாஸ்கர், விஜய் டிவி பிரபலம் புகழ், ப்ரீத்தி ஷர்மா என பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். மேலும், சந்தானத்தின் சபாபதி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை வாங்க பார்க்கலாம்.

கதைக்களம்:

Advertisement

படத்தில் பிறப்பிலிருந்து பேச்சு சரியாக வராமலிருக்கும் திக்கி திக்கி பேசும் கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்து இருக்கிறார். இவருக்கு எப்போதும் சிறு வயதில் இருந்தே துணையாக இருப்பவர் சாவித்திரி(ப்ரீத்தி ஷர்மா). சந்தானத்தின் அப்பா அரசு வேலையில் பணிபுரிபவர். பின் அவரின் அப்பா ஓய்வு பெற வேண்டிய நிலை வருவதால் தன்னுடைய மகனை வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்கிறார். இதனால் பல வேலைகளுக்கு சந்தானத்தை அனுப்புகிறார். ஆனால், சந்தானத்திற்கு அங்கு நிறைய அவமானங்கள் தான் மிஞ்சுகிறது. இதனால் விரக்தியும், கோபத்தில் சந்தானம் ஒருநாள் வீட்டிற்கு குடித்து விட்டு வருகிறார். இதனால் வீட்டில் கலவரம் வெடிக்கிறது.

போதையில் இருக்கும் சந்தானத்திற்கு தெரியாமலேயே ஒரு மிகப்பெரிய விஷயம் நடக்கிறது. இதன் மூலம் இவருடைய விதி விளையாடுகிறது. பின் சந்தானம் விதியின் கையில் சிக்கிக் கொள்கிறார். விதியின் விளையாட்டில் சந்தானம் எப்படி எல்லாம் விளையாடுகிறார்? அதை எப்படி சந்தானம் எதிர்கொண்டார்? கடைசியில் சந்தானம் தன் தந்தையின் கனவை நிறைவேற்றுகிறாரா? சந்தானத்தின் குறைகள் தீர்ந்ததா? என்பதே படத்தின் கதை. வழக்கம் போல் படத்தில் சந்தானம் தன்னுடைய கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Advertisement

அதோடு சில காட்சிகளில் தன் நடிப்பை உணர்வுபூர்வமாக காண்பித்திருக்கிறார். கதாநாயகி தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். படத்தில் சந்தானத்திற்கு பிறகு எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பு பாராட்டக்குரிய வகையில் இருக்கிறது. மேலும் படத்தில் சில காட்சிகளில் மட்டும் புகழ் நடித்திருப்பதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

Advertisement

படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கவரவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது என்று சொல்லலாம். படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த சந்தானம்– புகழ் காம்போ கொஞ்சம் ஒர்க் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம் புகழ் ஓரிரு காட்சிகளில் மட்டும் வந்தது தான்.

படத்தில் வில்லனாக வரும் Sayaji Shinde நடிப்பு ஓகே என்று தான் சொல்லணும். பெரியதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் பேசப்படவில்லை. இயக்குனர் கதைக்களம் சூப்பராகவும், அதை சரியான முறையிலும் கொண்டு சென்றிருக்கிறார். படத்தில் நகைச்சுவை மட்டுமில்லாமல் சில கருத்துக்களையும் சொல்லி இருக்கிறார். ஆனால், படத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், படத்தில் சில காட்சிகள் போர் அடிக்கும் வகையில் சென்றிருக்கின்றது.

பிளஸ்:

சந்தானம், எம்எஸ் பாஸ்கரின் நடிப்பு தூள் கிளப்பி இருக்கிறது.

சீனிவாசராவ் அவர்களின் கதையும் இயக்கமும் அற்புதம் என்று சொல்லப்படுகிறது.

படத்தில் டைமிங் பஞ்ச்சும், நகைச்சுவையும் படத்திற்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி வேற லெவல் ஆக அமைந்து இருக்கிறது.

படத்திற்கு பின்னணி இசை பக்க பலம் சேர்த்திருக்கிறது.

மைனஸ்:

படம் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்று இருந்தால் நன்றாக இருக்கும்.

சந்தானம்-புகழ் காம்போ ஒர்கவுட் ஆகவில்லை.

சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கதையில் மாற்றங்கள் எதுவும் இல்லை.

நீண்ட நாட்கள் பிறகு சந்தானத்தின் படம் என்பதால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் இல்லாமல் கொடுத்த காசிற்கு சுமாராக இருக்கிறது.

மொத்தத்தில் சபாபதி- நகைச்சுவையிலும் கொஞ்சம் திக்கல் தான். .

Advertisement