சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரின் மரணம் தமிழகத்தையே உலுக்கி கொண்டு இருக்கிறது. சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் (59), அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் (31) பழைய பேருந்து நிலையத்தில் ஏபிஜே செல்போன் கடை வைத்திருக்கிறார்கள். இவர்கள் ஊரடங்கு உத்தரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்ததால் காவல் துறை அதிகாரிகள் தந்தை,மகன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கடுமையாக தாக்கி உள்ளனர். காவல்துறையினர் தாக்கியதில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டு அநியாயமாக உயிர் இழந்து உள்ளார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கொழுந்து விட்டு எரிகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் இரட்டை மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும். மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்கு கூட மரண தண்டனைகூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இருந்தும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி நபர்களை அடித்து கொன்று உள்ளார்கள். போலிஸாரின் ‘லாக்கப் அத்துமீறல்’ காவல் துறையின் மாண்பை குறைக்கும் செயல். இது ஏதோ ஒரு இடத்தில் தெரியாமல் நடந்த சம்பவம் என்று சொல்லி கடந்து செல்ல முடியாது. போலீஸின் சுயநினைவுடன் கொடூரமாக தாக்குப்பட்ட சம்பவம்.

Advertisement

மேலும், நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை பரிசோதிக்காமல் இயந்திர கதியில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறையில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளும் முறையாக நடக்கவில்லை. இத்தகைய ‘கடமை மீறல்’ செயல்கள், நம் அதிகார அமைப்புகள் காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அதனால் இதுபோன்ற ‘துயர மரணங்கள்’ ஒரு வகையான திட்டமிடப்பட்ட குற்றமாக (organised crime) நடக்கிறது. ஆகவே உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும், நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையை இருக்கிறது. இதேபோல் தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில்இருந்து தப்பிக்க முடியாது என்கிற நம்பிக்கையை அரசாங்கமும், நீதிஅமைப்புகளும் மக்களிடம் உருவாக்க வேண்டும்.

இரண்டு அப்பாவிகளின் மரணத்திற்கு காரணமானவர்களை ஆயுதபடைக்கு மாற்றம் செய்து உள்ளார்கள். ஆயுதப்படையில் பணியாற்றுவது என்பது தண்டனையா?? இரண்டு உயிர் போவதற்கு காரணமானவர்களுக்கு இதுதான் தண்டனையா?என்று எழுந்த விமர்சனத்திற்குப் பிறகே சம்பந்தப்பட்ட போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காவல்துறையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு பணியாற்றும் காவல் அதிகாரிகளும் உள்ளார்கள். ஒட்டு மொத்த நாடும் இயங்கமுடியாமல் ஸ்தம்பித்து நிற்கிற இந்த நேரத்திலும் ஓய்வில்லாமல் மக்களின் நலனுக்காக காவல்துறையினர் உழைக்கின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு உயிர்கள் பலியாகி இருப்பது, ஒரு குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. தந்தையையும், மகனையும் இழந்து வாடுகிற அந்தகுடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

Advertisement

இனிமேலும் இதுபோன்ற ‘அதிகார வன்முறைகள்’ காவல்துறையில் நிகழாமல் தடுக்க தேவையான மாற்றங்களை, சீர்திருத்தங்களை அரசும், நீதிமன்றமும், பொறுப்பு மிக்க காவல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்துமேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். குற்றம்இழைத்தவர்களும், அதற்கு துணை போனவர்களும் விரைவாகதண்டிக்கப்பட்டு ‘நீதி நிலைநிறுத்தப்படும்’ என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன் என்று கூறி உள்ளார் சூர்யா.

Advertisement
Advertisement