'இது ஏற்றுக்கொள்ள முடியாத தோல்வி!'... 76 ரன்களில் சுருண்ட இந்தியா; ஷ்ரேயாஸ் ஐயர் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட தவறுகள்

'இது ஏற்றுக்கொள்ள முடியாத தோல்வி!'... 76 ரன்களில் சுருண்ட இந்தியா; ஷ்ரேயாஸ் ஐயர் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட தவறுகள்

By S.Dhilip Kumar · 8/7/2026

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி அனைத்து துறைகளிலும் மோசமாக செயல்பட்டு 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 202 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி வெறும் 76 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இது இந்தியாவின் டி20 சர்வதேச வரலாற்றிலேயே ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியாக பதிவானது. இந்த மோசமான தோல்விக்குப் பிறகு இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்தார்.

'இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் தோற்பது ஏற்றுக்கொள்ள முடியாது'

போட்டி முடிந்த பிறகு பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், இந்த தோல்வியை மறைக்க முயலாமல் நேரடியாக விமர்சித்தார். "இது மிகவும் மோசமான ஆட்டம். இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் தோல்வியடைவது ஏற்றுக்கொள்ள முடியாதது. முதலில் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு மீண்டும் அடிப்படையிலிருந்து தொடங்கி எங்கே தவறு நடந்தது என்பதை ஆராய வேண்டும்," என்று கூறினார். அணியின் செயல்பாடு எந்த வகையிலும் திருப்திகரமாக இல்லை என்பதை அவரது வார்த்தைகளே வெளிப்படுத்தின.

201 ரன்கள் எடுத்த இங்கிலாந்து... 76 ரன்களில் சுருண்ட இந்தியா

டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் பில் சால்ட், ஜேக்கப் பெத்தல், சாம் கரன் ஆகியோரின் அதிரடியால் இங்கிலாந்து 20 ஓவர்களில் 201/7 ரன்கள் குவித்தது. 202 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பவர்பிளேயிலேயே 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்த இந்தியா, அதன் பின்னர் மீளவே முடியவில்லை. இறுதியில் 11.4 ஓவர்களில் வெறும் 76 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாப தோல்வியை சந்தித்தது.

'இது 200 ரன்கள் எடுக்கும் பிட்ச் இல்லை'

பிட்ச்சை காரணமாக கூறாமல், பேட்டிங் தோல்வியே முக்கிய காரணம் என்று ஷ்ரேயாஸ் ஐயர் ஒப்புக்கொண்டார். "இது 200 ரன்கள் எடுக்கும் ஆடுகளம் அல்ல. ஆனால் பவர்பிளேயிலேயே நான்கு விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியின் வேகத்தை நாங்களே இழந்துவிட்டோம். அங்கிருந்தே போட்டி எங்கள் கையை விட்டு நழுவியது," என்றார். அதாவது, போட்டியை இங்கிலாந்து வென்றதை விட இந்தியாதான் தனது தவறுகளால் தோற்றது என்பதை கேப்டன் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

'திட்டம் மட்டும் போதாது... மைதானத்தில் செயல்படுத்த வேண்டும்'

போட்டிக்கு முன் எவ்வளவு திட்டமிட்டாலும், அதை மைதானத்தில் சரியாக செயல்படுத்த வேண்டும் என்று ஐயர் கூறினார். "எவ்வளவு திட்டங்கள் போட்டாலும், மைதானத்திற்குள் வந்த பிறகு சூழ்நிலைக்கு ஏற்ப மாற வேண்டும். எந்த நீளத்தில் பந்துவீச வேண்டும் என்பதை விரைவாக புரிந்துகொள்ள வேண்டும். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஹார்ட் லெங்க்தில் சிறப்பாக பந்துவீசினர். ஆனால் நாங்கள் அதை சரியாக செயல்படுத்தவில்லை," என்று தெரிவித்தார்.

'ஒவ்வொரு வீரரும் பொறுப்பேற்க வேண்டும்'

இந்த தோல்வியில் இருந்து ஒவ்வொரு வீரரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேப்டன் வலியுறுத்தினார். "நாங்கள் மிகவும் மோசமான கிரிக்கெட் விளையாடினோம். ஆனால் இதிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு வீரரும் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாட வேண்டும். ஒவ்வொருவரும் தனிப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார். இது இளம் வீரர்களுக்கு மட்டுமல்ல, முழு அணிக்குமான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

https://x.com/Shailu_15Jul/status/2074666803092168945?s=20அடுத்த

போட்டியில் பதிலடி கொடுக்குமா இந்தியா?

தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. குறிப்பாக 3-வது டி20-யில் பேட்டிங், பந்துவீச்சு, களத்தடுப்பு என மூன்று துறைகளிலும் சொதப்பியது. இருப்பினும், "மீண்டும் வலுவாக திரும்பி வர இது ஒரு நல்ல வாய்ப்பு" என்று ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நம்பிக்கையை நிஜமாக்க வேண்டுமெனில், இந்திய அணி அடுத்த போட்டியில் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full