இந்த ஒரு வருடம் எனக்கு மிகப்பெரிய பாடம். நம்மகூட இருக்கிறவங்கள்ல யார் சரி, யார் தப்புனு தெரிஞ்சுக்கிறதுக்கு இயற்கை ஏற்படுத்தித்த இடைவெளியாதான் இந்த நாள்களை நினைக்கிறேன். ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி தந்த பிரபல்யத்தைவிட இந்த ஒரு வருஷம் முழுக்க பெரிய பப்ளிசிட்டியை என் மனைவி எனக்கு ஏற்படுத்தித் தந்தாங்க. கணவனுக்கு மனைவியே பி.ஆர்.ஓவா இருக்கிறது எவ்வளவு பெரிய கொடுப்பினை. ஸ்ஷப்பா... தூங்கி எந்திரிச்சா... கோர்ட் வாசல், போலீஸ் ஸ்டேஷன் வாசல்னு யூ-டியூப் சேனல், டிவி சேனல், நாளிதழ், வாரஇதழ் பேட்டிகள்னு டிசைன் டிசைனா எத்தனை எத்தனை ப்ரமோஷன்ஸ்.
உண்மையைச் சொல்லணும்னா என் மனைவி நித்யாவை பார்த்து ஒரு வருஷமாச்சு. என் மகள் போஷிகாவைப் பார்க்கவும் என்னை அனுமதிக்கலை. ஆனால் அவளோட படிப்புக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் நான்தான் கவனிச்சுட்டு வர்றேன். ஒரு அப்பனா அது என் உரிமை, கடமை. போலீஸ், கோர்ட்னு போய் நின்னாலும் பிரச்னை எனக்கும் நித்யாவுக்கும்தான். நாங்க இருவரும் இன்னைக்கு பிரிஞ்சிருக்கலாம், நாளைக்கே சேரவும் செய்யலாம். அனால் ஃபோஷிகாவைப் பொருத்தவரை நான்தான் அப்பா, நித்யாதான் அம்மா.
ஏழெட்டு மணிநேரம் இருக்கும்போதே வீட்ல உங்க ரெண்டு பேருக்கும் பிரச்னை வரும். இப்ப பிக்பாஸ் வீட்ல அதுவும் 24 மணிநேரமும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டு எப்புடிடா இருக்கப்போறீங்க? நீ எப்புடிடா சமாளிக்கப்போற’னு ஃப்ரெண்ட் ஒருத்தன் கேட்டான். உண்மை. ரொம்பவே கஷ்டம்தான். ஒரு வருஷத்துக்குப் பிறகு நித்யாவை இப்பதான் பிக்பாஸ் வீட்ல சந்திக்கப்போறேன். அதை நினைச்சா எனக்கே ஒருமாதிரிதான் இருக்கு. முதன்முதல்ல ஒரு பொண்ணைப் பார்த்து லவ் பண்ணுவாங்கள்ல, இது அப்படித்தான் இருக்கு. ஏற்கெனவே லவ் பண்ணி, கல்யாணம் பண்ணி, புள்ளையும் பெத்தாச்சு. என் வாழ்க்கையில அது மறுபடியும் நடக்குது பாருங்க. வாழ்க்கையை திரும்பத்திரும்ப ஆரம்பிக்கிறோம்னு நினைக்கிறேன்.
‘மாப்ள, கன்டென்ட் எடுக்க உன்னைத்தாண்டா டார்கெட் பண்ணுவாங்க. பலியாயிடாத. ரிலாக்ஸா இரு - இது இன்னொரு நண்பனின் அட்வைஸ். ‘கடந்த ஒரு வருஷமா யூ-டியூப் சேனல்களுக்கே இந்த பாலாஜிதாண்டா சைடீஷ்... துஷ்மான்’னேன். சிரிச்சுட்டான். மத்தவங்களுக்கு சைடிஷ் ஆகிறது நமக்கு புதுசா என்ன? சந்தோஷமா ஆகிட்டுப்போகவேண்டியதுதான்.
ஓகே. சார் நான் பிக் பாஸ் வீட்டுக்குள் போக வேண்டிய நேரம் வந்துடுச்சு. அங்க இருந்து திரும்பி வரும்போது நானும் நித்யாவும் பழையபடி ஒற்றுமையா கணவன்-மனைவியா திரும்பினாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை. இந்த சீசனோட டைட்டில் வின் பண்றேனோ இல்லையோ, நிச்சயம் ‘நல்லவன்’ங்கிற பட்டத்தோட வெளிய வருவேன். அவ்வளவுதான் சார். என்னை வாழ்த்தி அனுப்பிவைங்க” என்றபடி விடைபெறுகிறார் பாலாஜி.




