அனைவரும் எதிர்பார்த்த நடிகை ஜோதிகாவின் உடன்பிறப்பே படம் தற்போது வெளியாகி உள்ளது. இது இவரின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கத்துக்குட்டி படத்தை இயக்கிய சரவணன் தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்ற நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, ஷிஜா ரோஸ், ஆடுகளம் நரேன், கலையரசன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவான கதை. நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவந்த அண்ணன் தங்கை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதா? இல்லையா? என்பதை வாங்க பார்க்கலாம்.

கதைக்களம்:

Advertisement

படத்தில் அண்ணனாக சசிகுமாரும், கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளார்கள். சத்தியத்தை நம்பும் அண்ணனும் சட்டத்தை நம்பும் கணவருக்கும் இடையில் இரண்டுமே ஒன்றுதான் என்றும் நம்பும் பெண்ணின் கதையை மையமாகக் கொண்டது தான் உடன்பிறப்பே. படத்தில் சசிகுமாருக்கு தங்கை ஜோதிகா தான் எல்லாமே. இவர்களுடைய பாசத்தை பார்த்து மொத்த ஊரே மெய் மறந்து போகும். பின் ஜோதிகா சமுத்திரகனியை கல்யாணம் செய்து கொள்கிறார்.

படத்தில் சமுத்திரகனி ஒரு வாத்தியார். சட்டம், நியாயம், தர்மம் வழியில் நடப்பவர். சசிகுமார் அடிதடி வன்முறை என்ற வழியில் செல்பவர். இது சமுத்திரகனிக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. இதை வெளிப்படையாக சசிகுமாரிடம் சமுத்திரக்கனி சொல்லி உள்ளார். ஆனால், சசிகுமார் மாறவில்லை. இந்த சூழ்நிலையில் ஒரு எதிர்பாராத அசம்பாவித சம்பவத்தால் சசிகுமார் வீட்டை விட்டு மனைவி, மகளுடன் வெளியேறுகிறார் சமுத்திரகனி. அதற்குப்பிறகு ஒரே ஊரில் ஒரே தெருவில் கொஞ்ச தூரம் தள்ளி சசிகுமாரும், சமுத்திரகனியும் வாழ்ந்து வருகிறார்கள்.

Advertisement

இருவரும் ஒரே தெருவில் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதில்லை. ஜோதிகா தன் அண்ணனிடம் பேசினாலும் தன்னை விட தன் கணவரை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் செயல்படுகிறார். இவர் செய்யும் முயற்சிகள் பல பயன் அளிக்காமல் போகின்றது. இந்த சூழலில் ஜோதிகாவின் மகளுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. தாய்மாமன் இல்லாமல் திருமணமா? என்ற பிரச்சினையும் எழுகிறது. சமுத்திரகனிக்கு ஏன் சசிகுமாரை பிடிக்காமல் போனது? அப்படி என்ன அசம்பாவிதம் நடக்கிறது? இரு குடும்பத்தினரும் இணைந்தார்களா? ஜோதிகா மகளின் திருமணம் நடந்ததா? என்பது தான் படத்தின் மீதி கதை.

Advertisement

ஜோதிகா வழக்கம் போல தன்னுடைய கதாபாத்திரத்திலும் நடிப்பிலும் கலக்கி இருக்கிறார். இந்த படத்தில் முழுக்க முழுக்க கிராமத்து பெண் சாயலில் ஜோதிகா நடித்துள்ளார். தாலி சென்டிமென்ட், அண்ணன்– கணவன் இடையே சிக்கித் தவிப்பது என பல வகையில் இவருடைய நடிப்பு திரையரங்களில் கைதட்ட வைத்துள்ளது. சசிகுமாரும், சமுத்திரக்கனியும் வழக்கம்போல் தன்னுடைய நடிப்பில் தூள் கிளப்பி இருக்கிறார்கள். படத்தில் சசிகுமார் சவால் விடுவது, தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தட்டி கேட்பது, தங்கைக்காக எதையும் செய்யத் துணிவது, விட்டுக்கொடுக்காத மனப்பான்மை என பாசமுள்ள அண்ணனை கண்முன் நிறுத்தி உள்ளார்.

சமுத்திரகனி சட்டம், நியாயம், தர்மம் என்ற கொள்கையில் நடப்பவர். எதுவாக இருந்தாலும் சட்டத்தின் படி இறுதிவரை நின்று போராடுபவர். வழக்கம் போல தன் படத்தில் பக்கம் பக்கமாக டயலாக் பேசி இருந்தாலும் இந்த படத்தில் தேவையான இடங்களில் பேசி தன்னுடைய கதாபாத்திரத்தை நிரப்பியுள்ளார் சமுத்திரக்கனி. வழக்கம்போல சூரியின் காமெடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. ஜோதிகாவின் மகளாக நிவேதிதா சதீஷ் நடித்துள்ளார். சசிகுமாரின் மகனாக அறிமுக நடிகர் சித்தார்த் நடித்துள்ளார். இவர்களின் நடிப்பு இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

படம் அப்படியே நம்மை கிராமத்து பக்கம் நோக்கி சென்றுள்ளது. வழக்கமான அண்ணன் தங்கை கதையாக இருந்தாலும் சில மாற்றங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் இயக்குனர். மீண்டும் ஒரு கிழக்கு சீமையிலே படம் பார்த்தது போல இருந்தது. கதை மற்றும் திரைமொழியின் பலவீனத்தால் உடன்பிறப்பே படம் கொஞ்சம் தடுமாறி இருக்கிறது. இருந்தாலும் இந்த பண்டிகை நாளில் நல்ல கிராமத்து விருந்தாகவும், ஆழ்துளை கிணறு குறித்த ஒரு விழிப்புணர்வும், பொழுதுபோக்கு அம்சமாகவும் உடன்பிறப்பே அமைந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படமாக உடன்பிறப்பே உள்ளது.

பிளஸ்:

படத்தில் நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து உள்ளார்கள்.

படத்திற்கு பக்கபலமாக இசையும், ஒளிப்பதிவும் அமைந்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் பார்க்கும் படமாக அமைந்துள்ளது.

மைனஸ்:

வழக்கமான கதையை தான் கொஞ்சம் மாத்தி செய்திருக்கிறார் இயக்குனர்.

இன்னும் படத்தில் புதிய மாற்றங்கள் வைத்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் இன்னும் கொஞ்சம் சென்டிமென்ட்டை சேர்த்திருந்தால் தூள் கிளப்பி இருக்கும் என்று கூறப்படுகிறது.

படத்தில் அண்ணன்-தங்கை பாசம், ஆழ்துளைக்கிணறு விழிப்புணர்வு என உணர்வு பூர்வமான சில விஷயங்களைக் காட்டி இருக்கிறார் இயக்குனர். பல வருடங்களுக்கு பிறகு கிழக்கு சீமையிலே படத்தை கண்முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் உடன்பிறப்பே குடும்பத்தோடு பார்க்கும் படம்.

Advertisement