தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜயகாந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

இவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். பின் சமீப காலமாக இவருக்கு உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று நடிகர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

Advertisement

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் மதுவால் தினம் தினம் சீரழிந்து வருகின்றன. மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய தமிழக அரசோ தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து இளைய சமுதாயத்தின் பாதையை மாற்றி அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்கிறது. மேலும், சட்டவிரோத மது விற்பனையால் மோதல்களும், கொலைகளும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடாமல், ஒவ்வொரு மதுபாட்டில் மீது ரூ.10 கூடுதலாக விற்பது குறித்தும், டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்தும் கேள்வி எழுப்பும் செய்தியாளர்களை பார்த்து நீங்கள் குடிக்கிறீர்களா என தமிழக அமைச்சர்கள் பொறுப்பில்லாமல் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

மதுபாட்டில்களில் மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற வாசகத்தின் கீழ், தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் புகைப்படத்தை ஒட்டி அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு சிறுமியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அந்தப் புகைப்படத்தை பார்த்தாவது ஒவ்வொரு தந்தையும் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று கூறி இருக்கிறார். தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அறிக்கை இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கேலி கிண்டல் செய்து வருகிறார்கள்.

Advertisement
Advertisement