அர்ஜுனால் தான் நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன் என்று விஷ்வக் சென் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் 90 கால கட்டம் தொடங்கி இன்று வரை படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவின் புரூஸ்லி என்று பெயரெடுத்தவர் நடிகர் அர்ஜுன்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ஆக்ஷன், அதிரடி, தேசப்பற்று பாணியில் இருக்கும். இதனாலே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகம் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். தற்போது அர்ஜுன் அவர்கள் வில்லன், குணச்சித்திர வேடங்களில் மிரட்டி வருகிறார். தற்போது இவர் தமிழ், மலையாள படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement

அர்ஜுன் இயக்கும் படம்:

அந்த வகையில் தற்போது அர்ஜுன் அவர்கள் தெலுங்கில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விஷ்வக் சென்னை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்திருந்தார். கதாநாயகியாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க இருக்கிறார். மேலும், படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் படத்தில் இருந்து ஹீரோ விலகி விட்டார் என்ற செய்தி வெளியாகி இருந்தது. இது குறித்து சமீபத்தில் அர்ஜுன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார்.

அர்ஜுன் அளித்த பேட்டி:

அதில் அவர், எனது மகளை தெலுங்கு திரையுலகில் அறிமுகப்படுத்துவதற்காக தான் இந்த படத்தை நான் தொடங்கினேன். நான் கதையை சொன்னதும் படத்தில் நடிக்க விஷ்வக் சென் ஒப்புக்கொண்டார். அதற்குபின் அவர் கேட்ட சம்பளத்தை நாங்களும் தர சம்பாதித்தோம். இருந்தாலும், படப்பிடிப்பில் விஷ்வக் சென் கலந்து கொள்ளவில்லை. அவரை நாங்கள் பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால், பதில் கொடுக்கவில்லை. என் வாழ்நாளில் அவருக்கு போன் செய்தது போல் வேறு யாருக்குமே அத்தனை முறை போன் செய்திருக்க மாட்டேன்.

Advertisement

படத்தில் இருந்து ஹீரோ நீக்க காரணம்:

ஒரு நடிகன் தனது தொழிலில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். அந்த அர்ப்பணிப்பு விஷ்வக்கிடம் சுத்தமாக இல்லை. இந்த ஒரு சூழலில் அவரை வைத்து இந்த படத்தை தொடர வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க இருக்கிறேன் என்று கூறி இருந்தார். இந்நிலையில் தொடர்பாக விஷ்வக் சென் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ஒவ்வொரு படத்துக்காகவும் 40 நாட்கள் ஷூட்டிங், 20 நாட்கள் விளம்பரம் படுத்துவதற்கு என்ற அடிப்படையில் தான் திட்டமிடுவேன்.

Advertisement

விஷ்வக் சென் கொடுத்த விளக்கம்:

நான் மிகவும் அர்ப்பணிப்பு உள்ள நடிகர் என்று நம்புகிறேன். அர்ஜுன் படத்திற்கான முதல் பாதி ஸ்கிரிப்டை படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் என்னிடம் கொடுத்தார். கதை பற்றி நன்றாக விவாதித்த பிறகு படப்பிடிப்பை நடத்தலாம் என்று சொன்னேன். ஆனால், அவர் என்னுடைய ஆலோசனையை கேட்கவில்லை. அவருடைய இந்த செயல்கள் எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் படப்பிடிப்புக்கு நான் செல்லவில்லை. படத்திலிருந்து நான் தானாகவே விலகவில்லை. நான் எப்பொழுதும் என் பிரச்சனைகளை நான்கு சுகர்களுக்கு நடுவில் தீர்த்துக் கொள்வேன். ஆனால், அவர் இந்த பிரச்சனையை ஊடகங்களுக்கு எடுத்துச் சென்றார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement