மாநகர பட நடிகரின் ஹோட்டலில் அதிரடியாக சோதனை நடத்தி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சந்தீப் கிஷன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பதை தாண்டி சொந்தமாக பிசினஸ் செய்து கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் ஹைதராபாத்தில் ஜூப்ளிகில்ஸ், செகந்திராபாத் போன்ற இடங்களில் உள்ள பிரபலமான ஓட்டல்களில் பங்குதாரராக இருக்கிறார்.
இப்படி இருக்கும் நிலையில் திடீரென நடிகர் சந்தீப் கிஷன் நடத்தி வரும் செகந்திராபாத் ஹோட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி இருக்கிறார்கள். அந்த சோதனையில் 25 கிலோ அரிசி காலாவதி ஆகி இருந்தது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் பச்சை மற்றும் அரைத்த உணவுகளில் லேபிள்கள் இல்லை, துருவிய தேங்காய்களிலும் சில இயற்கை உணவு வண்ணங்கள் இருப்பதை கண்டு பிடித்து இருக்கிறார்கள்.
சந்தீப் கிஷன் ஹோட்டல் சோதனை:
அதோடு சமையலறை பகுதிகளிலும் அதிக அளவில் கழிவுநீர் தேங்கி இருக்கிறது. இதை அடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் காலாவதியான உணவுகளை பறிமுதல் செய்து அழித்து இருக்கின்றனர். பின் அவர்கள் ஓட்டல் நிர்வாகத்தினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தும், தரமான வகையில் உணவை கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியும் இருக்கிறார்கள். இந்த சம்பவம் செகந்திராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு சந்தீப் கிஷன் தரப்பில் என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சந்தீப் கிஷன் குறித்த தகவல்:
தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் வெளியான ‘மாநகரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சந்தீப் கிஷன். ஆனால், இவர் ஏற்கனவே ‘யாருடா மகேஷ்’ என்ற படத்திலும் நடித்து இருந்தார். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் போன்ற சில படங்களில் நடித்து இருந்தார்.
சந்தீப் கிஷன் திரைப்பயணம்:
தெலுங்கில் தான் இவர் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்றிருந்தது. அதோடு சமீபத்தில் தான் லண்டனில் நடந்த விருது விழாவில் கேப்டன் மில்லர் படத்திற்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருது கிடைத்திருக்கிறது.
ராயன் படம்:
தற்போது சந்தீப் கிஷன் அவர்கள் மீண்டும் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராயன்’ படத்தில் நடித்து இருக்கிறார். இது தனுஷின் 50வது படம் என்பதால் அவரே இயக்கி நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து சில படங்களில் சந்தீப் கிஷன் கமிட்டாகி இருக்கிறார்.