நடிகை தேவயானி இயக்கியிருக்கும் முதல் படத்திற்கு விருது கிடைத்திருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தேவயானி. இவர் மும்பையை சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் சுஷ்மா .1993 ஆம் ஆண்டுதான் இவர் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். தற்போது வரை இவர் சினிமாவில் நடித்து வருகிறார்.
இவர் ‘தொட்டா சிணுங்கி’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதற்கு பிறகு இவர் சில படங்களில் நடித்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாகியது அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த ‘காதல் கோட்டை’ படம் தான். இந்த படத்தின் மூலம் இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது. அதனைத் தொடர்ந்து இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து புகழ்பெற்றார்.
தேவயானி திரைப்பயணம்:
மேலும், இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு நடிகை தேவயானி அவர்கள் சினிமா உலகில் இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு காரணம் இயக்குனர் ராஜகுமாரன் தான். தேவயானியும், இயக்குநர் ராஜகுமாரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். திருமணத்திற்கு பின் தேவையானி அவர்கள் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தேவயானி இயக்கிய படம்:
மேலும், படங்கள் தவிர இவர் பல தொடர்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் நடித்த ‘கோலங்கள்’ சீரியல் ஆறு வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில், தற்போது நடிகை தேவயானி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். ‘கைக்குட்டை ராணி’ என்ற குறும்படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரித்தும் உள்ளார். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்க, பிரபல எடிட்டர் பி. லெனின் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவையும், லட்சுமி நாராயணன் ஏ.எஸ். ஒலி வடிவமைப்பையும் கையாண்டுள்ளனர்.
சிறந்த குறும்படம் விருது:
சுமார் 25 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளை திரையில் சொல்கிறது. தாயை இழந்த, தந்தை வெளியூரில் பணிபுரியும் ஒரு பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறது என்பதை இப்படம் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தியது. மேலும், ‘கைக்குட்டை ராணி’ குறும்படத்தை பார்த்த 17ஆவது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா நடுவர் குழுவினர் குழந்தைகளுக்கான சிறந்த குறும்படத்திற்கான விருதுக்கு இந்த குறும்படத்தை தேர்ந்தெடுத்து இருப்பதோடு தேவயானி மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள்.
மகிழ்ச்சியில் தேவயானி:
இதுகுறித்து நடிகை தேவயானி, எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்த போதிலும், முதன்முறையாக நான் இயக்கிய குறும்படம் சர்வதேச அளவில் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது. இதில் பங்காற்றியுள்ள மூத்த கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மற்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை கொண்டு செல்லும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்று கூறியிருக்கிறார். மேலும், இத்திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்லும் பணியை உலக சினிமா பாஸ்கரன் ஏற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.