தென்னிந்திய சினிமா உலகில் பரிட்சயமான நடிகைகளில் ஒருவர் பூர்ணா. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு திருமுருகன் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளிவந்த ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகை பூர்ணா அவர்கள் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, கொடி வீரன் என பல படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
பூர்ணா அவர்கள் திரைக்குள் நுழைந்து 10 வருடங்கள் ஆகியும் அவரால் முன்னணி நடிகையாக திகழ முடியவில்லை. தற்போது அவருக்கு சரியான பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் இவர் தனது வாழ்க்கையில் இருக்கும் பல்வேறு சுவாரஸ்யமான ரகசியங்களை மனம் திறந்து பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,
எனது தந்தை காசிம், தாயார் ரம்லா பீவி. எனக்கு நான்கு சகோதரர்கள் உள்ளார்கள். சராசரி குடும்பத்தில் இருந்து தான் நான் திரை உலகிற்கு வந்தேன். திரை உலகில் நான் இந்த அளவுக்கு உயர என்னைவிட அதிக பிரச்சனைகளை சந்தித்தது என் அம்மா தான். நான் சிறந்த நடிகையாக வேண்டும் என்றும், புகழ் பெற வேண்டும் என்றும் அவர் ஆசைப்பட்டார். அதற்காக பல கஷ்டங்களை அனுபவித்தார்.
நான் நடனம் கற்று கொண்டு கோவில்களிலும், மற்ற வழிபாட்டு தளங்களிலும் ஆடினேன். அதனால் பலபேர் பல விதமாக விமர்சித்தார்கள். சினிமாவிற்கு வந்ததும் அதிகமாக என்னை விமர்சித்தார்கள். ஆனால், நான் சார்ந்திருக்கும் மதத்தில் அதிக நம்பிக்கை கொண்டவள். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எல்லா புண்ணிய நாட்களிலும் நோன்பு இருக்கிறேன். இது தெரியாமல் என்னை விமர்சிக்கிறவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
என் உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். நான் அதை விட ஒரு குழந்தையை கூடுதலாக பெற்று 6 பேருக்கு அம்மாவாக விரும்புகிறேன். ஏனெனில் பிரசவம் போன்றவையை நான் ரசித்து அனுபவிக்க விரும்புகிறேன். என் வாழ்க்கையிலும் ஒரு காதல் இருந்தது. ஆனால், இருவருமே ஒருவருக்கொருவர் வேதனை தராமல் பிரிந்து விட்டோம். அந்த காதலை பற்றி என் குடும்பத்தினருக்கும், எனக்கு நெருக்கமானவர்களுக்கும் மட்டும் தெரியும்.
வீட்டில் எல்லோரது சம்மதத்துடன் திருமணம் நடக்கும் வேண்டும் என்பது தான் அம்மாவின் ஆசை. ஆனால், அந்த காதலில் அது நடக்காது என்பதால் நாங்கள் பிரிந்து விட்டோம். என்னுடைய வாழ்க்கையிலும் பல சோகங்களும் கஷ்டங்களும் இருக்கு. ஆனால், ஒருவரை பற்றி முழுசாக தெரியாமல் யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பல பேர் படமாக தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதில் “தலைவி” என்ற பெயரில் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து வருகிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தில் பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார். மேலும், ஜெயலலிதாவின் தோழி சசிகலா கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடித்துக் கொண்டிருக்கிறார்.