விஜய் டிவி சீரியலில் இருந்து நடிகை சாய் காயத்ரி விலகி இருக்கும் செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சாய் காயத்ரி. இவர் விஜய் டிவியில் மட்டுமில்லாமல் பிற சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யா ரோலில் நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது.
இடையிலே இந்த தொடரில் இருந்து சாய் காயத்ரி விலகி இருந்தார். அதற்குப் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீ நான் காதல்’ என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் ‘இஸ் பியார் கோ கியா நாம் தூண்’ என்கிற ஹிந்தி சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த சீரியலில் ஹீரோவாக பிரேம் ஜாக்கோவும், ஹீரோயின் ஆக வர்ஷினி சுரேஷ் நடிக்கிறார்கள். சாய் காயத்ரி இந்த சீரியலில் ஹீரோயினுக்கு அக்காவாக நடித்து வந்தார்.
நீ நான் காதல்:
மேலும், இந்த தொடரில் சங்கரேஸ் குமார், நவீன் முரளிதரன், சரவணன், ஷீலா, தமிழ்ச்செல்வி, கிரிஷ், சங்கீதா பாலன், ஹர்ஷா நாயர், மதுமிதா இளையராஜா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் சுமார் ஒரு வருடத்தை கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வாய்ப்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து நடிகை சாய் காயத்ரி விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.
சாய் காயத்ரி விலகல்:
இது குறித்து அவர், ‘அனைவருக்கும் வணக்கம். தவிர்க்க முடியாத உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக நான் ‘நீ நான் காதல்’ சீரியலில் இருந்து விலகுகிறேன். அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். இதுவரை நீங்கள் எனக்கு கொடுத்த வரவேற்பை இனியும் அணு மற்றும் ஆகாஷ் கதாபாத்திரத்திற்கு கொடுக்க வேண்டும். உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. விரைவில் உங்களை மீண்டும் சின்னத்திரை மூலம் சந்திப்பேன் நன்றி என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
சாய் காயத்ரி பதிவு:
அதோடு, தனக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்த விஜய் டிவி தொலைக்காட்சி மற்றும் ஒட்டுமொத்த சீரியல் குழுவிற்கும் தன்னுடைய நன்றியையும் தெரிவித்ததோடு, கடந்த ஒரு வருடமாக தன்னுடன் பயணித்த குழுவினரை மிகவும் மிஸ் செய்வதாக சாய் காயத்ரி பதிவிட்டுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, நடிகை சாய் காயத்ரி தனக்கென ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். மேலும, இவர் ‘சாய் சீக்ரெட்ஸ்’ என்கிற நிறுவனத்தை தொடங்கி சிறிய தொழிலதிபராக விளங்கி வருகிறார்.
சாய் காயத்ரிக்கு பதில் யார்?
அந்த நிறுவனத்தின் மூலம் இவர் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஹேர் ஆயில், ஃபேஸ் மாஸ்க், நலங்கு மாவு, ஹேர் பேக் உள்ளிட்ட எட்டு பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவருடைய பொருட்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நடிகை சாய் காயத்ரி, ‘நீ நான் காதல்’ தொடரில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நடிகை அர்ஷிதா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே ‘தமிழும் சரஸ்வதியும்’ என்னும் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.