பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பாக நடிகை சனம் செட்டி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாகவே பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லை குறித்து பிரபலங்கள் பலருமே குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் ஒருவர் மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி இருந்தது.
இப்படி நாளுக்கு நாள் சிறு குழந்தைகள் தொடங்கி இளம் வயது பெண்கள் வரை என பல பேர் பாலியல் தொல்லைக்குட்பட்டு இறந்தும் போகிறார்கள். இப்படி அடுத்தடுத்து கோர சம்பவங்கள் இந்தியாவில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இதை அடுத்து மலையாள திரை உலகில் பாலியல் தொல்லை நிறைய இருப்பதாகவும், அட்ஜஸ்ட்மெண்ட் உட்பட்டால் தான் வாய்ப்புத் தருகிறேன் என்று பலர் மிரட்டுவதாகவும் ஹேமா கமிட்டி அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது.
சனம் செட்டி பேட்டி:
இந்த நிலையில் இவர்களுக்கு உறுதுணையாகவும், பெண்களுக்கு ஆதரவாகவும் பிக் பாஸ் பிரபலமும், நடிகையுமான சனம் செட்டி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், கொல்கத்தாவில் மருத்துவர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரைக்கும் அதற்கு தீர்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலுமே அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.
பாலியல் குற்றங்கள்:
இதனால் பல அப்பாவி பெண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மாதிரி தவறுகளை செய்யும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். பலரும் அதற்கு குரல் கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால், தீர்ப்பு தான் கிடைக்கவில்லை. பாலியல் குற்றங்களுக்கு இந்தியாவில் இருக்கும் தண்டனைகள் பத்தாது, கடுமையாக இருந்தால் தான் பெண்களை தொடுவதற்கு பயப்படுவார்கள். இல்லை என்றால் பலரும் இப்படித்தான் தவறு செய்து கொண்டே இருப்பார்கள்.
ஹேமா கமிட்டி அறிக்கை:
இதற்காகத்தான் நாங்கள் ஒரு விழிப்புணர்வு கொடுக்க போலீசிடம் அனுமதி கேட்டு வந்திருக்கிறோம். சமீபத்தில் தான் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகியிருந்தது. அதை பார்த்து அவர்களுக்கு ஆதரவாகவும், ஹேமா அறிக்கையை ரொம்பவே பாராட்டுகிறேன். அவர்கள் வெளிப்படையாக நடக்கும் குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள். இந்த மாதிரி தமிழ் சினிமாவிலும் நடக்கிறது என்று கேட்டால் உண்மையில் நடக்கிறது என்று தான் சொல்வேன். இந்த சம்பவம் நடந்த போதே நீங்கள் சொல்லி இருக்கலாமே என்று கேட்கிறார்கள்.
தமிழ் சினிமா குறித்து சொன்னது:
எனக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை நடந்த போது, அந்த இடத்தில் என்னிடம் கேட்டவரிடம் செருப்பால அடிப்பேன் நாயே என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன். அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணினால் தான் வாய்ப்பு என்று சொல்லும் போதே அவர்களுக்கு தக்க பதிலடியும் கொடுத்திருக்கிறேன். ஆனால், தமிழ் சினிமாவில் இதுவரையும் நான் நடித்த படங்களில் அந்த மாதிரி எந்த பிரச்சனையும் நடந்தது இல்லை. சிலர் செய்யும் தப்பால் எல்லோரையும் குறை சொல்ல முடியாது. நான் பண்ண எல்லா ப்ராஜெக்ட்டுக்கு 100% நல்லவர்கள் தான். எல்லோரையுமே குறை சொன்னால் நல்லவர்களும் தவறாகிவிடுவார்கள் என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார்.