தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் தல அஜித். இவர் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க பல போராட்டங்களை கடந்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. அதிலும் அவர் உடலில் ஏற்பட்ட காயங்கள், அறுவை சிகிச்சைகள் என பல இன்னல்களை சந்தித்ததும் அனைவருக்கும் தெரிந்தது தான். மேலும், அஜித் அவர்கள் உடல்ரீதியாக மட்டுமில்லாமல் மன ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பல சிரமங்களை கடந்துள்ளார். அந்த வகையில் அவர் சந்தித்த மோசமான அனுபவம் மற்றும் சவாலாக அமைந்த படம் தான் ஆனந்த பூங்காற்றே.
இயக்குனர் ராஜ்கபூர் 1999ஆம் ஆண்டு ஆனந்த பூங்காற்றே என்ற படத்தை எடுக்க முடிவு செய்தார். ரோஜா கம்பைன்ஸ் சார்பில் காஜா மைதீன் இந்த படத்தை தயாரித்தது. இந்த படத்தில் நடிக்க கார்த்திகையும், அஜித்தையும் தேர்வு செய்தார்கள். ஏனென்றால் அப்போது இவர்கள் இருவரும் தான் மிகப் பிரபலமான நடிகர்கள். பின் கதாநாயகியாக மீனாவை தேர்வு செய்தார்கள். இந்த மூவரும் இந்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. பிறகு முதல்கட்ட போஸ்டர் எல்லாம் வெளியானது.
அப்போது அஜித் காயங்களால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். வரக்கூடாது என நினைத்த அவருடைய முதுகு தண்டு வலி வந்து விட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தார். மேலும், ஆனந்த பூங்காற்றே படத்திற்கான வேலைப்பாடுகளும் தொடங்கியது. முதலில் படத்தில் கார்த்திக், மீனா இருக்கும் காட்சிகள் எல்லாம் இயக்குனர் ராஜ்கபூர் எடுத்தார். பின் அஜித் நிலைமையை அறிந்து வேறு ஒரு நடிகரை எடுக்க முடிவு செய்தார். ஆனால், ராஜ் கபூருக்கு அதில் உடன்பாடு இல்லை. அதற்கு பிறகு தான் படத்தில் பிரசாந்த் நடிக்க தேர்வு செய்தார்கள்.
ஆனால், பிரசாந்த்திடம் கால்ஷிட் இல்லாத காரணத்தால் வேறு நடிகர்களை தேர்வு செய்ய நினைத்தார்கள். ஆனால், ராஜ் கபூருக்கு எந்த நடிகரையும் அந்த கதாபாத்திரத்தில் போட விருப்பமில்லை என்பதால் மீண்டும் அஜித்திடம் பேச மருத்துவமனைக்கு சென்று இருந்தார். அப்போது அஜித்துக்கு உடல் வலியுடன் மன வலி தான் அதிகமாக இருந்தது. இந்த படத்தில் அஜித் நடிக்கவில்லை என்றும் பல சர்ச்சைகள் சினிமா உலகத்தில் பேசப்பட்டு வந்தது. மருத்துவமனைக்கு சென்ற ராஜ்கபூரை பார்த்த அஜித் என்னோட க்ளோஸ் நண்பராக இருந்து கொண்டு இப்படி பண்ணிட்டீங்களே என்று கேட்டதற்கு ராஜ்கபூர் இல்லை இப்போ வரை நீதான் வேணும் என்று நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறினார். உடனே அஜித்தும் கவலைப்படாதீங்க 15 நாள்கள் பிறகு நான் வந்து நடிக்கிறேன் என்று சொன்னார்.
அஜித் சொன்ன மாதிரி பதினைந்து நாள் கழித்து நடிக்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். வந்த முதல் நாளே அவர் மவுண்ட் ரோட்டில் டபுள் டக்கர் பஸ்ஸில் ஆட வேண்டும். அப்போது இயக்குனர் இது எல்லாம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னவுடன் இல்லை நான் பண்ணுகிறேன் என்று செய்து கொடுத்தார் அஜித். அதே மாதிரி சண்டை காட்சியிலும் கை ,கால் தூக்க வேண்டாம் என்று இயக்குனர் சொல்லியும் இல்லை நான் பண்ணி தருகிறேன் என்று இயக்குனர் நினைத்தபடியே எல்லா காட்சிகளிலும் அற்புதமாக அஜீத் நடித்தார். அஜீத் இந்த படத்தை மிக சவாலாக செய்து தந்தார். இயக்குனர் நினைத்தபடியே படம் நல்ல வெற்றியையும் பெற்றுத் தந்தது.