நடிகர் யோகி பாபுவை, ஆந்திர துணை முதல்வர் மற்றும் நடிகருமான பவன் கல்யாண் புகழ்ந்திருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களின் பட்டியலில் யோகி பாபு பெயர் தான் முதல் இடத்தில் இருக்கும். இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்த ‘மண்டேலா’ படம் பல விருதுகளைப் பெற்று இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சமீபத்தில் யோகி பாபு ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படத்தின் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் ‘போட்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
யோகி பாபுவை பாராட்டிய பவன்:
மேலும், யோகி பாபு வானவன், ஜோரா கைய தட்டுங்க போன்ற பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், நடிகரும் ஆந்திர மாநில துணை முதல் மந்திரியுமான பவன் கல்யாண் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் யோகி பாபுவை பாராட்டி பேசியுள்ளார். அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், நடிகர் யோகி பாபுவின் நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த வீடியோவை பகிர்ந்து அபவன் கல்யாண்க்கு நடிகர் யோகி பாபு நன்றி தெரிவித்துள்ளார்.
Thank you so much 🤝 deputy chief minister of Andra pradesh @PawanKalyan sir🤝 for your prestiges words 😊and encouraging me 🫂🫂🫂🫂😊👏👏👏😊#PawannKalyan #yogibabu #pawankalyanyogibabu pic.twitter.com/cHSjPI2K96
— Yogi Babu (@iYogiBabu) October 2, 2024
யோகி பாபு பதிவு :
அதில், மதிப்பு மிக்க வார்த்தைகளுக்கும், என்னை ஊக்குவித்ததற்கும் ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாண் சாருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கிடையே சமீபத்தில் ஹைதராபாத்தில் ‘மெய்யழகன்’ ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் தொகுப்பாளர், நடிகர் கார்த்தியிடம் லட்டு வேண்டுமா? என்று கேட்டு இருந்தார். அதற்கு கார்த்தி, லட்டு வேண்டாம். இப்போது அது சென்சிட்டிவான விஷயம். அதைப்பற்றி பேசாதீர்கள். எனக்கு எந்த லட்டு வேண்டாம் என்று எதார்த்தமாக பேசியிருந்தார்.
பவன் கல்யாண் கண்டனம்:
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், ஆந்திரா துணை முதல்வரான நடிகர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில் அவர், லட்டு விவகாரத்தை பலரும் கேலி செய்வதை என்னால் பார்க்க முடிகிறது. சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் கூட லட்டு சென்சிடிவ் டாபிக் என்று கூறியிருந்தார்கள். ஒரு நடிகராக நான் உங்களை மதிக்கிறேன். ஆனால், சனாதான தர்மம் என்று வரும்போது ஒரு வார்த்தை பேசுவதற்கு முன்பு 100 முறை யோசிக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.
மன்னிப்பு கேட்ட கார்த்தி:
அதற்கு, நடிகர் கார்த்தி வருத்தம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் பேசுவது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இப்படி கார்த்தி மன்னிப்பு கேட்டது ரசிகர்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நடிகர் யோகி பாபுவை அவன் பாராட்டி இருப்பதை பார்த்து, கார்த்திக்கு எச்சரிக்கை யோகிபாபுவுக்கு பாராட்டா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.