அமரன் படத்தால் சென்னையை சேர்ந்த இளைஞருக்கு ஏற்பட்டுள்ள தொல்லை தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே ‘அமரன்’ படம் குறித்த செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகம் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.
அமரன் படம்:
தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியான இப்படம் தான் தற்போது டாக் ஆப் தி டவுன் ஆக உள்ளது. இந்தப் படத்தை பார்த்து பாராட்டாத ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அமரன் திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அமரன் திரைப்படம் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு தனது தொலைபேசி எண்ணை பேப்பர் ஒன்றில் எழுதி கசக்கி அவரிடம் தூக்கி வீசுவார் .
சாய் பல்லவி தொலைபேசி எண்:
படத்தில் அந்த தொலைபேசி எண் சரியாக தெரியவில்லை என்றாலும், அதை எழுதி வைத்துக்கொண்டு பல ரசிகர்கள் அந்த நம்பருக்கு தற்போது அழைத்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ, அந்த நம்பருக்கு சொந்தக்காரரான சென்னையைச் சேர்ந்த வி.வி. வாகீசன் என்ற இளைஞர் தான். இது குறித்து அந்த இளைஞர் கூறுகையில், ‘தீபாவளிக்கு அடுத்த நாள் எழுந்து பார்த்த போது, நூறு மிஸ்டு கால்கள், ஹலோ, வாய்ஸ் மெசேஜ்கள், இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் எனக்கு வந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட இளைஞர் சொன்னது:
இப்படி தொடர்ந்து போன் கால்கள் ஒரு பக்கம் இருக்க, படத்தின் முகுந்து வரதராஜனின் மனைவியான இந்து ரெபேக்கா வர்கிஸின் உண்மையான தொலைபேசி எண் இதுதான் என்று நினைத்து பலரும் அழைத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அழைப்புகளை எதிர் கொள்ள முடியாமல் படத்தின் இயக்குனருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சமூக வலைதள பக்கத்தில் மெசேஜ் அனுப்பினேன். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. தற்போது தொடர் அழைப்புகளால் எனது செல்போனை சைலன்டில் வைத்துள்ளேன்.
ஏர்டெல் நிறுவனமும் கை விரித்தது :
அதனால் எனக்கு வரும் முக்கியமான அழைப்புகளை ஏற்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. இந்த நம்பரை நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய வங்கி கணக்கு உட்பட பல விஷயங்களுக்கு இந்த எண்ணை கொடுத்திருப்பதால் இந்த நம்பரை விட்டு விடவும் முடியாது. அதோடு என்னுடைய நம்பர் instagram ரீல்ஸிலும் இடம்பெற்றதால் அது இன்னும் ஏராளமானவர்களை சென்று சேர்ந்திருக்கிறது. இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, அவர்களும் அழைப்புகளை பிளாக் செய்ய முடியாது என கைவிரித்து விட்டனர் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.