சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி மக்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரசினால் உலக மக்கள் அனைவரும் அச்சத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். நாளுக்கு நாள் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இதனால் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உள்ளார்கள். ஊரடங்கு உத்தரவினால் கடைகள், போக்குவரத்து, பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தினக்கூலியை மட்டும் நம்பியுள்ள பணியாளர்களின் குடும்பங்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தினமும் கூலி வேலை செய்து தான் சாப்பிட வேண்டும் என்ற நிலையில் உள்ள பல குடும்பங்கள் கொரோனாவினால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.
நாடு முழுவதும் தற்போது உணவு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதியே அனைத்து படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளது. சினிமா துறையில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் சினிமா துறையில் உள்ள பிரபலங்களிடம் பெப்சி உதவி செய்ய சொல்லி வேண்டுகோள்வைத்தார்கள்.
பெப்சி வேண்டுகோளுக்கு இணங்க சினிமா நட்சத்திரங்கள் FEFSI மூலமாக உதவி செய்து வருகின்றனர். மேலும், பல பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை மோடி நிவாரண நிதிக்கும், தமிழக அரசு நிவாரண நிதிக்கும் கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் தல அஜித் அவர்கள் 1.25 கோடி ரூபாய் பணத்தை நிவாரண நிதியாக அளித்து இருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு நடிகர் ராகவா லாரன்ஸும் 3 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அளித்து உள்ளார். இந்நிலையில் பாடகி சின்மயி அவர்கள் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக ஒரு வித்தியாசமான புது முறையை கையாண்டு நிதி திரட்டி வருகிறார். இது குறித்து பாடகி சின்மயி கூறியிருப்பது, தினமும் கூலி வேலை செய்து வரும் வருமானத்தை நம்பி இருக்கும் குடும்பங்களின் பட்டியலை அனுப்பியுள்ளேன்.
அவர்களுக்கு நீங்கள் பணம் அனுப்பிட்டு விட்டு அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து எனக்கு அனுப்புங்கள். அப்படி அனுப்பினால் தனது குரலில் பிறந்தநாள் வாழ்த்து, மெசேஜ் அல்லது பாடல் பாடி வீடியோ ஒன்றை அனுப்புகிறேன் என கூறியுள்ளார். சின்மயி இப்படி ஒன்றை அறிவித்ததும் பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். சின்மயிக்கு பலரும் வாழ்த்து செய்தியை அனுப்பி வருகிறார்கள்.
சின்மயி அவர்கள் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின்னர் இவர் பல படங்களில் பாடி உள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் உள்ளார். இதை தொடர்ந்து இவர் படங்களில் பின்னணி குரல் தருபவராகவும் பணியாற்றி வந்தார்.