தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிரஞ்சீவி. ‘மெகா ஸ்டார்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி, தெலுங்கில் நடிகராக அறிமுகமான முதல் படம் ‘பிராணம் கரீடு’. இந்த படத்தை இயக்குநர் கே.வாசு இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் சிரஞ்சீவி நடித்திருக்கிறார். சிரஞ்சீவியின் 150-வது படம் 2017-ஆம் ஆண்டு டோலிவுட்டில் ரிலீஸானது.
‘கைதி நம்பர் 150’ என டைட்டில் சூட்டப்பட்டிருந்த அந்த படத்தை பிரபல இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கியிருந்தார். இப்படம் குறித்த கூடுதல் சிறப்பு என்னவென்றால், இது தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமான ‘தளபதி’ விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காம். 1981-ஆம் ஆண்டு சிரஞ்சீவி நடித்த ’47 நாட்கள்’ என்ற படம் தமிழ் / தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியானது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் – இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூட்டணியில் வெளியான ‘ராணுவ வீரன்’ என்ற தமிழ் படத்தில் சிரஞ்சீவி நடித்திருந்தார். மேலும், ரஜினியின் ‘மாப்பிள்ளை’ (தமிழ்) படத்தில் கெஸ்ட் ரோலில் வலம் வந்திருந்தார் சிரஞ்சீவி. தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் சிரஞ்சீவி நடித்திருக்கிறாராம்.
தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவியின் தாயார் அஞ்சனா தேவி இந்த லாக் டவுனில் தனது தோழிகளுடன் இணைந்து தினமும் 700 முகமூடிகள் தயாரித்து வருவதாக டோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது.
அதுமட்டுமின்றி, சிரஞ்சீவியின் தாயார் புகைப்படம் ஒன்றும் வைரலாக பரவி வந்தது. தற்போது, நடிகர் சிரஞ்சீவி இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “பரவி வரும் இந்த செய்தி உண்மை இல்லை. புகைப்படத்தில் இருப்பது எனது தாயார் இல்லை. இருப்பினும் இப்படி ஒரு நல்ல செயலை செய்து வரும் அப்புகைப்படத்தில் இருக்கும் அம்மாவிற்கு நான் மனதார நன்றி கூறிக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
‘கைதி நம்பர் 150’ படத்துக்கு பிறகு சிரஞ்சீவி நடித்த ‘சைரா நரசிம்மா ரெட்டி’ என்ற திரைப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் கடந்த ஆண்டு (2019) வெளி வந்தது. இதனைத் தொடர்ந்து ‘ஆச்சார்யா’ என்ற புதிய படத்தில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை கொரட்டால சிவா இயக்கி கொண்டிருக்கிறார்.