நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுவனம் மீது வழக்கறிஞர் லூசியாள் ரமேஷ் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.சென்னை என்.எஸ்.சி.போஸ் ரோடு, ஒய் எம்.சி.ஏ கட்டடத்தில் குடியிருப்பவர் லுசியாள் ரமேஷ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், “நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 27 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணிபுரிந்துவருகிறேன். நான் பல்வேறு சமூக, சமுதாயப் பணிகளையும் செய்துவருகிறேன்.
தமிழகத்தில் சமீப காலமாக புதுப்புது அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. அப்படி கட்சி ஆரம்பிப்பவர்கள், தாங்கள் மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் எனக் கூறி ஆட்சிக்கு வர முயற்சி செய்யலாம். ஆனால், அதைவிட்டு முந்தைய ஆட்சியாளர்களை கேவலமாகவும் அவதூறாகவும் பேசி வருகின்றனர். அதை தடுக்க வேண்டும். விஜய் டிவியில் பிக்பாஸ் 2 என்ற நிகழ்ச்சி கடந்த 40 நாள்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டுவருகிறது.
ஒரு வாரம் நடந்த நிகழ்வை சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார். அப்போது அவர், மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்க்க கட்சி சம்பந்தமான பேச்சுக்களை பேசுகிறார். இது அவரது கட்சியை வளர்க்க அவர் எடுத்துள்ள யுக்தி, மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசிவருகிறார். சர்வாதிகாரி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஜஸ்வர்யா என்ற பெண் சர்வாதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
எனவே, பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். மேலும், ஜெயலலிதாவை சர்வாதிகாரி போல சித்திரிக்கும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இந்த நிகழ்ச்சியைத் தயாரிக்கும் நிறுவனத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.