பிரதமர் இப்போதாவது மௌனத்தைக் கலைக்க வேண்டும் என ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 9 பேர் பலியாகியிருக்கின்றனர்.

Advertisement

100வது நாளாகப் போராடி வரும் மக்கள் மீது நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச்சூடு தமிழகத்தை அதிரவைத்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது என அரசு விளக்கமளித்துள்ளது.

இந்தநிலையில், துப்பாக்கிச் சூடு நடவடிக்கைக்கு நடிகர் விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளதாவது, “தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை.

Advertisement

சமூகக் காரணத்துக்காகப் போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. 50,000 மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்றால், அவர்கள் தூத்துக்குடி மக்கள் நலனுக்கு எதிரான ஆலையை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். துப்பாக்கிச் சூடு நடத்தி கொடூரமான முறையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Advertisement

பா.ஜ.க சொல்கிறது போராட்டம் என்பது ஜனநாயக முறை என்று; அப்படியெனில், அதைப் பொதுமக்கள் ஏன் செய்யக் கூடாது. பிரதமர் இப்போதாவது மௌனத்தைக் கலைக்க வேண்டும். அரசாங்கம் என்பது மக்களுக்காக இருக்க வேண்டும். இல்லையெனில், 2019-ல் கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement