சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியான முதல் நாளே கோடிக்கணக்கில் வசூலைக் குவித்தது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுவருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், அண்ணன்-தங்கை பாசத்தையும் மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் அண்ணாத்த. மேலும், அண்ணாத்த படம் குறித்து சிலர் நல்ல விமர்சனங்களை சொல்லி வந்தாலும், ஒரு சிலர் தாறுமாறாக நெகட்டிவ் விமர்சனங்களை சொல்லி வருகின்றனர்.
அதிலும் இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்கள். ரஜினிக்கு மகள் வயதில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் தங்கையா? அவருக்கு ஜோடி நயன்தாராவா? என்று பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வந்தாலும் இந்த படம் தாய்மார்களின் மத்தியில் பேராதரவை பெற்று உள்ளது. மேலும், தமிழ் சினிமா உலகில் இதுவரை நூற்றுக்கணக்கான அண்ணன் தங்கை படங்கள் வெளிவந்திருக்கிறது. அதில் சில படங்கள் தான் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதில் ஒன்று தான் விஜய் நடிப்பில் வெளிவந்திருந்த திருப்பாச்சி.
இந்த படத்தை பேரரசு எழுதி இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆகி இருந்தது என்று சொல்லலாம். இந்நிலையில் திருப்பாச்சி படத்திற்கும், அண்ணாத்த படத்திற்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வந்துள்ளது. திருப்பாச்சி படத்தில் கிராமத்தில் வசிக்கும் தங்கையைத் திருமணம் செய்து கொடுக்க அண்ணன் சென்னைக்கு வருகிறார். பின் அங்கு இருக்கும் ரவுடிகளுடன் சண்டை போட்டு அநியாயத்தை தட்டிக் கேட்பார்.
அதே போல் தான் அண்ணாத்த படத்திலும் நடந்துள்ளது. இதில் என்ன ஒரு வித்தியாசம் என்றால் கீர்த்தி சுரேஷ் காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ஓடிப் போகிறார். இந்த நிலையில் அண்ணாத்த படத்திற்கு எதற்கு இவ்வளவு கொடூரமான விமர்சனங்களை கொடுக்கிறீர்கள் என்று பேரரசு ட்விட்டர் பக்கத்தில் கொதித்துப்போய் ரசிகர்களை கிண்டல் செய்துள்ளார். அதில் அவர் கூறியது, திரைப்படம் என்றால் நிறை குறை எல்லாம் இருக்கத்தான் செய்யும். தேசத் துரோகத்துக்கு ஈடாக வன்மத்தோடு விமர்சனம் செய்வது வேதனையாக இருக்கிறது. சில யூடியூப் சேனல்கள் விமர்சனம் என்ற பெயரில் கேவலமாக போயிருக்கிறார்கள். இருந்தும் அண்ணாத்த வெற்றி எல்லாரையும் அண்ணாந்து பார்க்க வைத்து உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். அது மட்டுமில்லாமல் ரஜினிகாந்த் திரைப்படங்களிலேயே மோசமான விமர்சனங்களை அண்ணாத்த படம் தான் சந்தித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.