ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் போட்ட “ஸ்கெட்ச்”..!

0
1018
Aishwarya-Bigg-Boss
- Advertisement -

பிளாக் ஹியூமர் எனப்படும் அவல நகைச்சுவை பாணியில் அமைந்த திரைப்படத்தின் ஒரு பகுதியைப் பார்ப்பது போலவே இன்றைய பிக்பாஸ் திருநாள் இருந்தது. சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் இருமுனை தத்தளிப்பை ஏற்படுத்துவது அவல நகைச்சுவையின் தன்மைகளுள் ஒன்று. அதை இன்றைய நிகழ்ச்சியின் மூலம் நன்றாக உணர முடிந்தது.

-விளம்பரம்-

bigg boss senrayan

- Advertisement -

ஐஸ்வர்யாவின் பொய், துரோகம், அதனால் அவருக்குள் எழுந்த அச்சம் மற்றும் குற்றவுணர்ச்சி, சென்றாயனின் வெள்ளந்தித்தனம், புலிவாலைப் பிடித்துவிட்டு விடமுடியாத அவரது குழப்பம், ‘உனக்கு அஞ்சு நிமிஷம் டைம் தர்றேன். தலைக்கு டை அடிச்சு விடு” என்று தன்னைத்தானே பலி கொடுப்பதற்கு கெடு தந்த புத்திசாலித்தனம் (?!), முன்னுக்குப் பின் முரணான சொற்களால் குழப்பிக் குழப்பியே அவரை அந்த நெருக்கடிக்கு தள்ளிய ஐஸ்வர்யாவின் நெஞ்சழுத்தம், இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் சென்றாயன் மீதான அக்கறை என்ற பெயரில் கூடிக் கும்மியடித்த விஜயலஷ்மி, ஜனனி, ரித்விகா ஆகியோரின் அறச்சீற்றம், நட்புக்கும் நியாயவுணர்ச்சிக்கும் இடையில் தத்தளித்த அல்லது அப்படிப் பாவனை செய்த யாஷிகா, மும்தாஜின் தவிப்பு, ‘உங்க அம்மாவை யாரு மன்னிப்பு கேட்கச் சொன்னது?” என்று ஓர் உணர்ச்சிகரமான நாடகத்தை ஆபாசமாக்கிய பாலாஜியின் அபத்தமான கோபம் என்று பல்வேறு கலவையான உணர்ச்சிகள் இன்று போட்டியாளர்களிடமிருந்து வெளிப்பட்டன.

இதன் தோராயமான ஆரம்பப்புள்ளி ஐஸ்வர்யாவின் துரோகத்திலிருந்து தொடங்கியது என்றால் அது மிகையாகாது. அதன் முன்தொடர்ச்சிகளை தேடிச் சென்றால் பிக்பாஸின் தொடக்கத்துக்குச் செல்ல வேண்டும். இன்னும் பின்னே சென்றால் ஐஸ்வர்யாவின் இளம்பருவத்தின் சூழலுக்குக்கூட செல்ல வேண்டியிருக்கும். இந்தச் சிறிய கட்டுரைக்கு இத்தனை பெரிய ஆராய்ச்சி தாங்காது. எனவே விட்டுவிடுவோம். ஒரு சிக்கலான சூழலில் ஒரு மனம் எவ்வாறு இயங்குகிறது என்பதைச் சம்பந்தப்பட்டவரின் ஆளுமைதான் முடிவு செய்கிறது என்பதும் இளமைப்பருவத்தின் சூழல்தான் அந்த ஆளுமையைத் தீர்மானிக்கிறது என்பதாலும் இந்த வரலாறு தேவைப்படுகிறது என்கிற சுருக்கமான தகவல் மட்டும் இப்போதைக்குப் போதும்.

-விளம்பரம்-

Aishwarya

ஒரு பொய், அதுக்கு மேல இன்னொரு பொய் என்று விஜயலஷ்மி ஓரிடத்தில் சொன்னது போல் ஐஸ்வர்யா சொன்ன ஒரு பொய் இன்றைய நாளின் தலையெழுத்தைத் தீர்மானித்தது. ஒரு மாதிரி கோக்குமாக்காக, குழப்பமான உரையாடல்களால் நிறைந்திருந்த இன்றைய நாளின் சம்பவங்களை, என்னுடைய புரிதலில் கோர்வையாக அளிக்க முயற்சி செய்கிறேன்.

கடந்த சீஸனில் இந்தப் பகுதி இருந்ததா என்பது நினைவில் இல்லை. சீஸன் 2 பற்றிய பொதுமக்களின் கருத்துகள் சிலவற்றை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒளிபரப்பினார். இதன் மூலம் அவர்களைப் பற்றி வெளியுலகம் என்ன கருதுகிறது என்பதையும் இந்தக் கருத்துகள் அவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கக்கூடும் என்பதும் அவரது கணக்காக இருக்கும். போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவர்கள் முழு அர்ப்பணிப்புடன் இயங்குவதற்கான விசையை அளித்தாக வேண்டும் என்று பிக்பாஸ் டீம் கருதியிருக்கக்கூடும்.

பொதுமக்களின் கருத்துகள் சில போட்டியாளர்களுக்குச் சாதகமாகவும் சிலருக்கு எதிர்மறையாகவும் வந்தன. இது பிக்பாஸ் எடிட் செய்தது என்பதால் எது வெளியாக வேண்டும் என்பது அவர்களால் தீர்மானிக்கப்பட்டது என்பது வெளிப்படை. ‘டாஸ்குகளில் பாலாஜி ரொம்ப சோம்பேறியாக இருக்கிறார்’ என்றொருவர் சொன்னார். இதற்கு பாலாஜியின் முகபாவம் காட்டப்படவில்லை. “ஜனனியின் எக்ஸ்பிரஷனஸ் க்யூட்டா இருக்கு” என்றொரு இளைஞர் சொன்னதற்கு அகம் மகிழ்ந்தார் ஜனனி. (அப்போ ஜனனி ஆர்மியும் இருக்கு போல!). “சென்றாயன் வெகுளிதான். ஆனா மெள்ள மெள்ளமா கத்துக்கிறாரு. அவர் வின் பண்ண சான்ஸ் இருக்கு” என்று ஒரு பெண்மணி சொன்னவுடன் பயங்கரமாக உற்சாகமானார் சென்றாயன். ‘வாடா… வாடா சண்டைக்கு வாடா’ என்று ஜாலியாக மற்றவர்களின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தார்.

சர்ச்சைகளின் நாயகியான ஐஸ்வர்யாவுக்குச் சாதகமாக கருத்துகள் வந்ததின் மூலம் அவர் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார். “ஐஸ்வர்யா Bold-ஆ இருக்காங்க” என்று சில இளம் பெண்கள் சொன்னதும் ‘அவங்க குப்பையைக் கொட்டினது டாஸ்க்தான்’ என்று ஓர் அம்மணி சொன்னதும் ஐஸ்வர்யாவுக்கு உற்சாக டானிக்போல் அமைந்தது. தன்னுடைய இமேஜ் வெளியில் எப்படியிருக்கிறதோ என்கிற நெடுநாள் கவலை, சமீபத்தில் அதைக் குத்திக்காட்டிய விஜயலட்சுமியின் சீண்டல் போன்வற்றால் சோர்ந்திருந்த ஐஸ்வர்யா, தனக்கு ஆதரவான கருத்துகளை பொதுமக்களிடமிருந்து கேட்டதும் கவுன்சிலர் தேர்தலில் வென்றதுபோல் ‘தமிலக மக்களே நன்றி’ என்று துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டார். (பிக்பாஸ் எடிட்டிங் டீமில் ஐஸ்வர்யா ஆர்மியைச் சேர்ந்த எவரோ இருக்கிறார் போல!). சும்மாவே ஆடும் ஐஸ்வர்யாவுக்கு இந்தக் கருத்துகள் காலில் சலங்கையைக் கட்டிவிட்டது போலாகி விட்டன.

bigg boss sendrayan

இதற்கு மறுநாள் அதாவது 79-ம் நாள் மதியம் பிக்பாஸ் ஒரு புதிய டாஸ்க்கை அளிக்கிறார். அதன்படி கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டிருக்கும் டெலிபோன் பூத்தில் அடிக்கப்படும் போனை எடுப்பவர் அடுத்த வார நாமினேஷனுக்குத் தானாகவே தேர்வாவார். (போனை எடுத்தாத்தானே பிரச்னை என்று ஒருவர் விலக முடியாது. அவர் எடுக்கவில்லையென்றாலும்கூட கூப்பிட்டு வந்து கும்மியடிக்க வைப்பார்கள்) இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, இது அடுத்த வார நாமினேஷனுக்குத்தான். இந்த வாரத்துக்கானது அல்ல). அழைப்பை எடுத்ததும் அவருக்கு ஒரு டாஸ்க் தரப்படும். அதை அவர் முடித்துவிட்டால் அடுத்த வார நாமினேஷனிலிருந்து பாதுகாக்கப்படுவார். போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் எப்படி விட்டுக் கொடுக்கும் தன்மையுடன் இருக்கிறார்கள் என்பதைச் சோதிப்பதற்காக இந்த டாஸ்க்காம். (நம்பிட்டோம்!).

மக்கள் தந்த உற்சாகத்தால், ‘ஃபைனல் வர்ற வரைக்கும் போகணும்னு ஆசையா இருக்கு. ஜெயிக்கக்கூட வேணாம். ஃபைனல்ல வந்தாக் கூட போதும்” என்று யாஷிகாவிடம் ஐஸ்வர்யா சொல்லிக்கொண்டிருந்த போது மணியோசை கேட்டது. பிக்பாஸ் ஊருக்குப் போயிருக்கிறார் போலிருக்கிறது. அவரது ‘கரகர’ உலோகக் குரலுக்குப் பதிலாக “சொல்லுங்க உங்களுக்கு என்ன பாட்டு போடணும். யாருக்கு இதை டெடிகேட் பண்றீங்க?” என்பது மாதிரியான எப்.எம்.ரேடியோ பாணி ஆண் குரல் ஒன்று ஐஸ்வர்யாவை விசாரிக்கிறது.

பிக்பாஸில் இப்படி மாறுதலானதொரு குரல் வருவது வித்தியாசமாகத்தான் இருக்கிறது என்றாலும் உலோகக்குரலுக்கு இருக்கும் மதிப்பு தனி. அந்தக் குரல் ஒலித்ததும் எந்தப் போட்டியாளராக இருந்தாலும் அட்டென்ஷன் மோடுக்கு வந்துவிடுவதைக் கவனிக்கலாம். நித்யாவின் மறுவருகையின்போது ‘இந்தக் குரலைக் கேட்டாலே ஒரு மாதிரி ஆயிடுது’ என்று அவர் சொன்னதையும் கவனிக்கலாம். இது உளவியல் ரீதியான விஷயம். குரல் மாறியதாலேயே போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. (ஜனனியின் சிரத்தையின்மையை அப்படிச் சொல்ல முடியும்)

ஐஸ்வர்யாவை விசாரிக்கும் அந்தக் குரலைத் தொடர்ந்து “என்னைக் குழந்தை மாதிரின்னு இங்க நெறய தடவை சொல்லியிருக்காங்க. அதனால நிறைய மகிழ்ச்சியை தியாகம் செய்திருக்கேன்” என்று ஐஸ்வர்யா அந்தக் குரலிடம் ஆதங்கப்படுகிறார்.

bigg boss

“சரி.. உங்க தியாகத்தைப் பத்திச் சொன்னீங்க. இது மத்தவங்க தியாகத்தைப் பத்தினது. இந்த போனை எடுத்ததின் மூலம் நீங்க அடுத்த வாரம் நாமினேட் ஆகியிருக்கீங்க. அதுல இருந்து உங்களை காப்பாத்திக்கணும்னா, நீங்க சென்றாயனின் தலையில் சிவப்பு நிற டை அடிக்கணும். இதுக்கு அவரை சம்மதிக்க வைக்கணும். அடுத்த அழைப்பு வருவதற்குள் நீங்கள் இதைச் செய்யணும்” என்று எஃப் எம் ஆசாமி அன்புடன் கட்டளையிடுகிறார்.

இந்தப் போட்டியின் இறுதிவரைக்கும் செல்ல வேண்டும் என்கிற உற்சாகத்துடன் இருக்கும் ஐஸ்வர்யா, எதையோ உள்ளுக்குள் தீர்மானித்தவராய் உள்ளே செல்ல முனைகிறார். அருகிருக்கும் தன் நெருங்கிய தோழியான யாஷிகாவிடமும்கூட தன் உத்தியைச் சொல்ல அவர் முயலவில்லை. நேரடியாக சென்றாயனிடம் செல்கிறார். அவரை அமர வைத்து விஷயத்தை மாற்றிச் சொல்கிறார். “நீங்க அடுத்த வாரம் டைரக்ட் நாமினேஷன்ல இருக்கீங்க. (ஆம் ‘அடுத்த வாரம்’ என்று சரியாகத்தான் சொல்கிறார்) நான் சொல்ற டாஸ்க்கை பண்ணீங்கன்னா நீங்க சேவ் ஆயிடுவீங்க” என்கிறார். இதில் ஜெயித்தால் தான் காப்பாற்றப்படுவேன் என்பதை மாற்றி சென்றாயன் காப்பாற்றப்படுவார் என்பதுதான் அவர் சொல்லும் பொய்.

இந்தப் பொய்யை தன் உத்தியாக அவர் கருதிக்கொள்ள முடியும்தான். ஏனெனில் இந்த விளையாட்டு அப்படி. ஆனால் இது இன்னொருவரின் ஆதாரமான உரிமையிலும் சுதந்திரத்திலும் அத்துமீறும் சமாசாரம். நடிகன் என்கிற கோணத்தில் தன் தலைமுடி பற்றி சென்றாயன் அதிக அக்கறையும் கவலையும் கொண்டிருக்கிறார் என்பதை முந்தைய டாஸ்க்குகளிலேயே பார்த்தோம். தலையில் முட்டை ஊற்ற வேண்டிய தண்டனையை மறுத்து அவர் ஆவேசப்பட்டதையும் பார்த்தோம். எனவே இந்த சென்சிட்டிவ்வான விஷயத்தில் அவரிடம் பொய் சொல்லி ஏமாற்றுவது நிச்சயம் துரோகம்தான். இதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் சென்றாயன் மந்தபுத்திக்காரர் என்பதை இன்னொரு முறை நிரூபித்தார். விவரங்களை நிதானமாக கேட்காமல் ‘ரெட் கலர்னா என்னாது?” என்று வெள்ளந்தியாக உடனேயே இதற்கு தயாராகிவிட்டார். அடுத்த வார நாமினேஷன் என்பதை ‘இந்த வாரத்திலிருந்து தப்பிக்க கிடைத்த வாய்ப்பாக’ கருதி அவர் உற்சாகமாக இந்த டாஸ்க்கிற்கு சம்மதித்துவிட்டார். சற்று நிதானமாக விவரங்களைச் சேகரித்திருக்கலாம். (இதையேதான் கோபத்துடன் பாலாஜி பிறகு சுட்டிக்காட்டினார்).

bigg boss aishwarya

மொழிப் பிரச்னையால் ஐஸ்வர்யாவுக்கு இந்த டாஸ்க் புரிந்ததா என்கிற சந்தேகம் இப்போது பிக்பாஸ் டீமுக்கு வந்துவிட்டது. எனவே ஐஸ்வர்யாவை மறுபடியும் அழைத்து ‘காப்பாற்றப்படப் போவது சென்றாயன் அல்ல, நீங்கள்தான் என்று புரிகிறதா?’ என்று எஃப் எம் ஆசாமி கேட்கிறார். “புரிகிறது. இதை எனது உத்தியாகப் பயன்படுத்துகிறேன். சென்றாயனுக்கு டாஸ்க் வரும்போது நான் உதவுவேன்” என்று ஐஸ்வர்யா விளக்கம் அளித்தவுடன் “ஓகே. ரைட். அது போதும். எப்படியாவது அடித்துக்கொள்ளுங்கள்’ என்று உற்சாகத்துடன் இதற்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டார். (கடந்த சீஸனில் ‘சீராக’ என்பதற்கு பொருள் தெரியவில்லை என்று காயத்ரி அடம்பிடித்த கதை போல் இதுவும் ஆகிவிடக் கூடாது என்கிற முன்ஜாக்கிரதையுணர்வு குறித்தான கவலை மட்டுமே பிக்பாஸுக்கு இருந்தது).

ஐஸ்வர்யா சொல்வதை சென்றாயன் கண்மூடித்தனமாக நம்பினாலும் கூட மற்றவர்களுக்குச் சந்தேகம் வருகிறது. இந்த டாஸ்க் சென்றாயனுக்கு அல்ல, இதன் மூலமான ஆதாயம் ஐஸ்வர்யாவுக்குத்தானே வரும்?” என்பது பற்றி அவர்கள் விதம் விதமாகப் பேசிக் கொள்கிறார்கள். ஐஸ்வர்யாவுக்கு வேண்டாதவர்களான விஜயலஷ்மி, ஜனனி, ரித்விகா போன்றோர் இதைத் துருவித் துருவி ஆராய்கிறார்கள். அடிப்படையில் புத்திசாலியான ரித்விகாவே ‘இதில் சென்றாயன் காப்பாற்றப்படுவதாகவும் இருக்கலாம்’ என்கிற தவறான யூகத்துக்குப் பிறகு வருகிறார். அந்த அளவுக்கு ஐஸ்வர்யாவின் பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்து மற்றவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ‘ஐஸ்வர்யா பொய் சொல்லியிருந்தால் அது நிச்சயம் தவறு’ என்று மும்தாஜ் மற்றவர்களிடம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். ஆனால் ஐஸ்வர்யாவுடன் இப்போதுதான் இணக்கம் திரும்பியிருப்பதால் மற்றவர்கள் போல் இதை அவர் மிகைப்படுத்த விரும்பவில்லை. ‘என் பெத்த குழந்தை தப்பு பண்ணியிருந்தாலும் அது தப்புதான்னு சொல்லுவேன்’ என்னுமளவுக்கு அவரது நியாயவுணர்ச்சி இருப்பதாக (அது பாவனையாக இருந்தாலும்) சொல்வது பாராட்டத்தக்கதே.

ஒரு பொய்யைச் சொல்லி விட்டு நெஞ்சழுத்தத்துடன் அதைக் காப்பாற்றுவதற்கு விதம் விதமான முயற்சிகளை ஐஸ்வர்யா செய்தாலும் அவரால் திறமையாகச் செய்ய முடியவில்லை. எளிதில் மாட்டிக் கொள்ளும்படி ‘திருதிருவென்று’ விழித்து மாற்றி மாற்றிப் பேசினார். மற்றவர்கள் இது குறித்து தொடர்ந்து விசாரித்ததும் அவருக்குள் பயமும் குற்றவுணர்ச்சியும் ஏற்படுகிறது. இதன் பிறகே யாஷிகாவிடம் சென்று நடந்ததைச் சொல்கிறார். அது சார்ந்த பதற்றத்தில் சென்றாயனுக்கு டை அடிக்கும் போது நிறத்தின் சதவிகிதத்தைக் குறைத்து விடுகிறார். ஒருவேளை இதில் மற்றவர்கள் பிரச்னை ஏற்படுத்தினால் கூட இதிலிருந்து தான் பின்வாங்கி விடலாம் என்றொரு கணக்கைப் போடுகிறார். பிறகு உண்மையில் அப்படித்தான் ஆயிற்று.

Aishwarya

சென்றாயன் உட்பட மற்றவர்கள் இது குறித்து துருவித் துருவி விசாரிக்கும் போது ‘இது ஒண்ணும் விஷம் இல்லை. வேணுமின்னா நீங்க தலையைக் கழுவிக்கிங்க. ஒண்ணும் ஆகாது” என்று குழந்தைத்தனமாக தன் திட்டத்திலிருந்து பின்வாங்குகிறார்.

உண்மையில் அவருக்கு இது வேண்டாத வேலை. அவர் இந்த வார நாமினேஷனில் இருப்பதால் இந்த துரோகத்தின் மூலம் மக்களின் வெறுப்பை மேலதிமாக சம்பாதித்துக் கொள்வோம் என்கிற எளிய உண்மை கூட அவருக்குப் புரியவில்லை. தன் மீதான எதிர்மறை வாக்குகள் இன்னமும் அதிகமாகலாம் என்கிற எண்ணம் கூட அவருக்குத் தோன்றவில்லை. தொலைக்காட்சியில் பார்த்த ஒரு சில மேலோட்டமான அபிப்ராயங்களைக் கொண்டு மக்கள் ஆதரவு தனக்குத்தான் என்பது போல கற்பனை செய்து கொண்டாரோ என்று தெரியவில்லை. பிக்பாஸ் ஒருவகையில் இதன்மூலம் அவரை தவறான திசைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. ஏனெனில் ஐஸ்வர்யாவின் செய்கைகளால் பொதுசமூகத்துக்கு அவர் மீது உருவாகியிருக்கும் வெறுப்பு பற்றி வெளியில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.

ஐஸ்வர்யாவின் இந்த உத்தியில் அடிப்படையிலேயே இரண்டு பிழைகள் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒன்று, இது அடுத்த வார நாமினேஷனுக்கானதுதான். ஒருவேளை இந்த வாரமே ஐஸ்வர்யா வெளியேற்றப்பட்டால் அவரது முயற்சிகள் மட்டுமல்லாமல் சென்றாயனின் தியாகமும் வீணாகி விடும். இன்னொன்று, சென்றாயனுக்கு டாஸ்க் வரும் போது அதைச் செய்யதான் எதற்கும் தயாராக இருப்பதாக ஐஸ்வர்யா வாக்குறுதி அளிக்கிறார். அவரது வாக்குறுதி உண்மையாக இருக்கலாம். அதற்கான துணிச்சல் அவருக்கு இருக்கிறது என்பதையும் உணர முடிகிறது. ஆனால் – சென்றாயனுக்கான டாஸ்க், ஐஸ்வர்யா தொடர்பாகத்தான் இருக்கும் என்று எந்தவொரு நிச்சயமும் இல்லை. வேறு யார் கூடவும் சென்றாயனை பிக்பாஸ் கோத்து விடலாம். எனில் ஐஸ்வர்யாவின் வாக்குறுதி இந்த நோக்கில் அர்த்தம் இழந்து விடுகிறது.

janani
janani

இந்த விஷயத்தில் சென்றாயனின் வெள்ளந்தித்தனம் ஒருவகையில் எரிச்சலூட்ட செய்தாலும் இன்னொரு பக்கம் பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது. ‘கல்யாணத்துக்குக் கூட நான் டை அடிக்கலை” என்று அனத்தலுடன் டை அடித்துக் கொள்ள தயாராகிறார். அதில் குழப்பம் தெரிந்தவுடன் ‘இந்த வாரம்னுதானே சொன்னே தங்கம்” என்று தன் அதிருப்தியைத் தெரிவிக்கிறார். ‘உங்களுக்குப் புரியலை’ என்று சொன்னால் கோபம் வந்து விடுகிற சென்றாயன், விவரங்களை முன்பே நிதானமாகக் கேட்டு அறிந்துகொண்டிருக்க வேண்டும்.

பிறகு ‘சரி. ஆனது ஆகிப்போச்சி. டை அடிச்சு விடு’ என்று ஐஸ்வர்யாவிடம் மன்றாடிய போது, மற்றவர்களின் குறுக்கு விசாரணையால் எரிச்சலாகியிருந்த ஐஸ்வர்யா, “முடியாது. நான் பண்ண மாட்டேன்’ என்று அழும்பு செய்த விதமும் ‘உனக்கு அஞ்சு நிமிஷம் டைம் தர்றேன்” என்று தன் பலியிடுதலுக்குத் தானே கெடு நேரம் கொடுத்த சென்றாயனின் வெள்ளந்தித்தனமும் அவல நகைச்சுவையின் துல்லியமான உதாரணங்கள். “நீ உண்மையைச் சொல்லியிருந்தா நான் மறுத்திருக்க மாட்டேனே தங்கம்” என்று அவர் சொல்லும் போது அப்படியொரு நெகிழ்ச்சி ஏற்பட்டது. ‘இப்படியொரு வெள்ளந்தியான ஆசாமியை ஏமாற்ற எப்படி மனசு வந்தது’ என்று ஐஸ்வர்யாவின் மீது கோபம் வந்தது நிஜம்.

தலையை விட்டு விட்டதால் அல்ல, உண்மையிலேயே சென்றாயன் இதற்கு மறுத்திருக்க மாட்டார் என்றுதான் தோன்றுகிறது. ஒருவேளை முதலில் சற்று முரண்டு பிடித்தாலும் பிறகு நிச்சயம் ஒப்புக்கொண்டிருப்பார். இந்த நேர்வழியை ஐஸ்வர்யா கடைப்பிடித்திருந்தால் இத்தனை சிக்கல்கள் உருவாகியிருக்காது. சென்றாயன் ஒப்புக் கொள்ள முடிவு செய்தாலும் மற்றவர்கள் இவரைக் குழப்பி விடுவார்களோ என்று ஐஸ்வர்யா கற்பனை செய்திருக்க வேண்டாம். அதுவும் நடந்திருக்கும்தான். ஐஸ்வர்யாவின் மீதுள்ள வெறுப்பை, சென்றாயனுக்கு ஆதரவு தருவதின் மூலம் மக்கள் தீர்த்துக்கொள்ள தயாராகத்தான் இருந்தார்கள். என்றாலும் நேர்வழியை ஐஸ்வர்யா பின்பற்றியிருக்கலாம்.

sendrayan

அடுத்த டாஸ்க் ஜனனிக்கு வந்தது. அதன் படி அவர் பாலாஜியை மொட்டை அடித்துக்கொள்ள சம்மதிக்க வைக்க வேண்டும். ‘நான் மத்தவங்களை மாதிரி டிவிஸ்ட் பண்ண மாட்டேன்’ என்று ஐஸ்வர்யாவை மறைமுகமாக குத்திக் காட்டிய ஜனனி, ‘இதுதான் விஷயம். முடிஞ்சா பண்ணுங்க. இல்லைன்னா விட்டுடுங்க” என்று அடிப்படை அறவுணர்ச்சியுடன் இந்த டாஸ்க்கை அணுக முயற்சி செய்கிறார். ஆனால், அப்படியிருந்தால் பிக்பாஸ் வீட்டில் வேலைக்கு ஆகாதே. “என்னம்மா.. இப்படிப் பண்றீங்களேம்மா?” என்று பிக்பாஸின் பினாமி ஆசாமி கூப்பிட்டு சற்று அதட்டியவுடன் ‘ப்ளீஸ். ஒத்துக்கங்க” என்று பாலாஜியிடம் கெஞ்ச ஆரம்பித்து விடுகிறார். ‘பாப்பாக்கு மொட்டை அடிக்கணும்’ என்கிற மழுப்பல் உள்ளிட்டு பல்வேறு விதமாகத் தயங்கிய பாலாஜி பிறகு ஒருமாதிரியாக ஒப்புக் கொள்கிறார் போலிருக்கிறது.

ஐஸ்வர்யாவின் தந்திரம், ‘அவருக்கும் சென்றாயனுக்கும் இடையில் ஆனது’ என்று மற்றவர்களால் சும்மாயிருக்க முடியவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வெள்ளந்தியான சென்றாயன் ஏமாற்றப்படுவதை சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதை விஜயலஷ்மி உள்ளிட்ட மற்றவர்கள் மீண்டும் மீண்டும் சொல்கின்றனர். ஆனால் இதில் சென்றாயனின் மீதுள்ள அக்கறையை விடவும் ஐஸ்வர்யாவை பழிதீர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாகத்தான் பயன்படுத்திக்கொள்கின்றனர். குறிப்பாக இந்த விஷயத்தில் விஜயலஷ்மியின் சீண்டல்கள் ரசிக்கத்தக்கதாக இல்லை. நாளை இதே போன்றதொரு டாஸ்க் அவருக்குத் தரப்படும் போது மற்றவர்கள் இடையில் புகுந்து குழப்பினால் எப்படி எதிர்வினை செய்வார் என்பதைக் காத்திருந்து பார்க்க வேண்டும்.

Balaji

ஐஸ்வர்யாவின் தந்திரத்தால், ‘இங்க இருந்து வெளியே போனா எல்லோரும் வேற வேறதான்’ என்கிற எரிச்சலை சென்றாயனுக்கு ஆலோசனையாக தருகிறார் பாலாஜி. இந்தத் தெளிவான நோக்கில்தான் ஜனனியின் வேண்டுகோளுக்கு கூட முதலில் அவர் தயங்குகிறார் என்று எடுத்துக்கொள்ள முடியும். ‘உனக்காகத்தானே நாங்க எல்லோரும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறோம்’ என்று அவர் சென்றாயனின் மீது எரிச்சல்படுவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவிடம் ஏற்பட்ட காரசாரமான உரையாடலில் ‘உங்க அம்மாவை யாரு மன்னிப்பு கேட்கச் சொன்னது? நீயும் தடுத்திருக்க வேண்டியதுதானே?’ என்றெல்லாம் பழைய விஷயங்களைக் கிளறியது உவப்பில்லாதது. இதன் மூலம் அப்போது நடந்த உணர்ச்சிகரமான தருணங்கள் அனைத்தையும் அபத்தமும் ஆபாசமும் கலந்த கலவையாக்கி விட்டார் பாலாஜி.

வழக்கம் போல் இந்த விஷயத்தை யாஷிகா புத்திசாலித்தனத்துடன் கையாண்டார். இதை முதலிலேயே ஐஸ்வர்யா தன்னிடம் சொல்லவில்லை என்கிற கோபம் ஒருபக்கம் இருந்தாலும் ‘இது அவளுடைய முடிவு’ என்று நட்பைக் காப்பாற்றுவதையும் ஒருபக்கம் செய்தார். ‘அவ என்னோட பெஸ்ட் ஃபிரெண்டாக இருந்தாலும் அவ செஞ்சது தப்பு’ என்று சென்றாயனிடமும் பிறகு தனிமையில் பேசினார். ஐஸ்வர்யாவை மற்றவர்கள் துருவித் துருவி விசாரிக்கும் போது ஐஸ்வர்யாவுக்காகப் பரிந்துகொண்டு முண்டாவைத் தட்டிக் கொண்டு களத்தில் குதிக்கவில்லை. ‘என்ன நடக்கிறது? என்பதை கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

டெலிபோன் மணி முதலில் அடிக்கும் போதும் சரி, ஐஸ்வர்யா பேசி விட்டு வரும் போதும் சரி, அதை எடுக்கவோ, அல்லது விஷயத்தை அறிந்து கொள்ளவோ யாஷிகா அத்தனை ஆர்வம் காட்டவில்லை. சாவகாசமாக படுத்த நிலையிலேயே இருந்தார். உணர்ச்சிகளை சட்டென்று வெளிப்படுத்தாத இயல்பும், ஆட்டத்தை புத்திசாலித்தனமாக கையாளும் கூர்மையும் பிக்பாஸ் ஆட்டத்துக்கு மிக இணக்கமானவை. இந்த நோக்கில் வெற்றிக் கோட்டை யாஷிகா நெருங்கிக்கொண்டிருப்பதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் தெரிகின்றன. இடையில் நாமினேஷன் ஆகாமல் மட்டும் பார்த்துக்கொள்ள வேண்டும். தப்பித்தவறி மாட்டினால் பழி போட மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. யாஷிகாவின் இந்த புத்திசாலித்தனத்துக்குப் பின்னால் வசீகரமான ஆபத்தும் இருக்கிறது. அமைதியாக இருந்து கழுத்தை அறுப்பதில் இது போன்ற ஆசாமிகள் விற்பன்னர்கள்.

டாஸ்க் ஒதுக்குவதில் பிக்பாஸ் ஓர் இணக்கமான பாணியைக் கையாள்வதைப் பார்க்க முடிகிறது. அப்பிராணியான சென்றாயனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையில் ஒரு டாஸ்க். தந்தை –மகள் என்கிற சென்ட்டிமென்ட் உடன் இருக்கும் பாலாஜிக்கும் ஜனனிக்கும் இடையில் ஒரு டாஸ்க். இதில் அத்தனை சுவாரஸ்யம் இல்லை.

vijayalakshmi

மாறாக, விஜயலட்சுமியின் தலையில் டை அடிக்கும் டாஸ்க்கை ஐஸ்வர்யாவுக்குத் தந்தால் அந்தச் சூழல் எத்தனை ரணகளமாக அமையும் என்று யோசித்துப் பாருங்கள். அடக்கடவுளே! பிக்பாஸை பார்த்துப் பார்த்து நான் பிக்பாஸை விடவும் டெடராக மாறிக் கொண்டிருக்கிறேன் போல. சுதாரித்துக்கொள்ள வேண்டும்.

Advertisement