எதிர்நீச்சல் நடிகர் விமல் குமார், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் பட்டித் தொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது ‘எதிர்நீச்சல்’ சீரியல் தான். வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர் நீச்சல் சீரியல்தான் உச்சத்தில் இருந்தது. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.
இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. பெண்களை மயப்படுத்தி இந்த தொடரை இயக்குனர் கொடுத்திருந்தார். ஆணாதிக்கம் கொண்ட நபர்களின் மத்தியில் பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு என்பதை சொல்லும் வகையில் இந்த சீரியல் இருந்து. யாரும் எதிர்பாராத விதமாக இந்த சீரியலை திடீரென முடித்தார்கள்.
எதிர்நீச்சல் விமல் குமார்:
மேலும், இந்த சீரியலில் கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் விமல் குமார். இவர் கரிகாலன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு பிரமாதமாக நடித்திருந்தார். எதிர்நீச்சல் சீரியல் மூலம் விமல் குமாருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. விமல் குமார் முதலில் ஆர்ஜே மற்றும் விஜேவாக பணிபுரிந்தவர். அதற்குப் பிறகு இவர் நடித்த முதல் சீரியல் ‘எதிர் நீச்சல்’. முதல் சீரியலிலே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
சொக்கத்தங்கம் சீரியல்:
சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியல் முடிந்த நிலையில், விமல் குமார் நிறைய சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும், ‘சொக்கத்தங்கம்’ சீரியலில் நடிக்கிறார். இந்த சீரியலில் இவருடன் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரியும் நடிக்கிறார். மேலும் இந்த சீரியலின் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திகை தீபம்:
மேலும், இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நம்பர் ஒன் சீரியலாக இருக்கும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலிலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கார்த்திக் ராஜ் மற்றும் ஆர்த்திகா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் கார்த்திக்கிற்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
விமல் குமார் கூறியது:
மேலும் இது குறித்து நடிகர் விமல் குமார், நான் கார்த்திகை தீபம் தொடரில் ஒரு கேமியோ ரோலில் தான் நடிக்கிறேன். இந்த வாரம் முழுவதும் ஒளிபரப்பாகும் எல்லா எபிசோடிலும் நான் வருவேன். எதிர்நீச்சல் சீரியலுக்குப் பிறகு கேமியோ மாதிரி இல்லாம, ஒரு நல்ல சீரியலில், நல்ல கதாபாத்திரத்தில் கமிட் ஆகி இருக்கிறேன். அது குறித்து தகவல்கள் உங்களுக்கு விரைவில் தெரியவரும். மேலும், என்னை கூடிய விரைவில் வெள்ளித்திரையிலும் நீங்கள் பார்க்கலாம் என்று சந்தோசமாக தெரிவித்துள்ளார்.