‘கொட்டுக்காளி’ படம் குறித்து இயக்குனர் அமீரின் கருத்திற்கு, தற்போது சினிமா ஆர்வலர்கள் தெரிவித்திருக்கும் எதிர்ப்பு தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக இருந்து, தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார் சூரி. சமீபகாலமாக இவர் நடித்த அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவதோடு, வசூல் சாதனையும் செய்து வருகிறது. தற்போது சூரியின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் ‘கொட்டுக்காளி’.
இப்படத்தை இயக்குனர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே ‘கூழாங்கல்’ என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தில் சூரி, அன்னா பென் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளைப் பெற்று இருந்தது. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
கொட்டுக்காளி குறித்து அமீர்:
சமீபத்தில் ஒரு விழாவில் இயக்குனர் அமீர், ‘வாழை’ ஒரு மெயின் ஸ்ட்ரீம் சினிமா. அதனால்தான் இவ்வளவு வரவேற்பு அந்த படத்திற்கு கிடைத்துள்ளது. ஆனால், ‘கொட்டுக்காளி’ ஒரு ஃபெஸ்டிவல் திரைப்படம். அது மெயின் ஸ்ட்ரீம் படம் கிடையாது. அதற்காக நான் அதை நல்ல படம் இல்லை என்று சொல்லவில்லை. பல சர்வதேச விருதுகளை பெற்ற ஒரு படத்தைக் கொண்டு வந்து ஒரு மெயின் ஸ்ட்ரீம் சினிமாவோடு போட்டி போட வைத்ததே வன்முறைதான். அதனால், 150 ரூபாய் கொடுத்து படம் பார்ப்பவர்கள் ‘ என்னங்க படம் எடுத்து வச்சிருக்காங்க?’ என்று திட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
சிவகார்த்திகேயன் செய்து தவறு:
இந்தப் படம் நான் தயாரித்து இருந்தால், தியேட்டருக்கு கொண்டு வந்திருக்க மாட்டேன்.
கொட்டுக்காளி படத்தின் தயாரிப்பாளர் ஒரு பிரபல நடிகராக இருக்கிறார். அவர் தன்னுடைய செல்வாக்கை வைத்து, ஏதேனும் ஒரு ஓடிடி தளத்தில் அப்படத்தை விற்றிருக்க வேண்டும். மேலும், தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் சூழலில், இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுவது சூரிக்கு சிவகார்த்திகேயன் செய்யும் துரோகம் என தெரிவித்திருந்தார். அமீர் இப்படி கூறியது சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.
சினிமா ஆர்வலர்களின் கருத்து:
அதைத் தொடர்ந்து, அமீரின் இந்த கருத்து சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ‘ஒரு நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக அறிமுகம் ஆகி இருப்பவர் சூரி. வழக்கமான கமர்சியல் நடிகர்களைப் போல் இல்லாமல், வித்தியாசமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். கமர்சியல் திரைப்படங்களை பார்த்து பழகிப்போன ரசிகர்களுக்கு கொட்டுக்காளி திரைப்படம் வித்தியாசமாக தான் இருக்கும். அதற்காக அந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என்று அமீர் சொல்வது தவறு.
thovachu thovachi adikirapla point pottu.. pic.twitter.com/afI7chU7ZK
— SK (@bsk5496) August 27, 2024
அமீர் குறித்து சினிமா ஆர்வலர்கள்:
அதேபோல், கொட்டுக்காளி எப்படிப்பட்ட படம் என படக் குழுவினர் தெளிவாக முன்பே விழாக்களில் கூறியிருந்தார்கள். இந்த படத்தைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவார்கள், இந்த படம் நல்ல வசூல் செய்யும் என்றெல்லாம் படக்குழுவினர் சொல்லவில்லை. இது ஒரு மாறுபட்ட திரைப்படம் என்று சொல்லி தான் படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். சர்வதேச திரைப்பட விழாக்களில் மட்டுமே இந்த படத்தை வெளியிட்டு, நீங்கள் மட்டுமே படத்தை பார்த்து பேசிக்கொண்டே இருக்க வேண்டுமா. அப்போ வெகுஜனகளாகிய நாங்கள் எல்லாம் இன்னும் பாலச்சந்தர், பாலுமகேந்திரா படங்களை மட்டுமே பார்த்து, பேசிக் கொண்டிருக்க வேண்டுமா என்று அமீருக்கு எதிராக சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்