தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். தனுஷ் அவர்கள் சினிமா உலகில் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல திறமையை காண்பித்து வருகிறார். கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த படம் “அசுரன்”. இந்த படம் அசுர வசூல் வேட்டையை ஆடியது. இதனைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் தனுஷ் நடித்து இருந்தார். இந்த படம் நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு சமீபத்தில் தான் வெளி வந்தது. இந்த படமும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த படம் “பட்டாஸ்”.
கொடி படதிற்கு பிறகு இயக்குநர் துரை செந்தில் குமார் அவர்கள் இரண்டாவது முறையாக தனுஷ் உடன் சேர்ந்து உள்ளார். இந்த பட்டாஸ் திரைப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் சினேகா, மெஹ்ரின் ஆகிய இருவரும் தனுஷுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் தனுஷ் அவர்கள் மீண்டும் இயக்குனராக களம் இறங்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பா. பாண்டி. இந்த படம் காதல், குடும்பம் என கலந்த கமர்ஷியல் படமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் தனுஷ், பிரசன்னா, ராஜ்கிரண், சாயாசிங், ரேவதி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய நகைச்சுவை மன்னனாக விளங்கிய கவுண்டமணியை வைத்து எடுக்கப் போவதாக தகவல் வந்துள்ளது. முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண் இந்த படத்தில் நடிக்க உள்ளாராம். இதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் எல்லாம் தனுஷ் முடித்து விட்டாராம். இந்த படத்தில் இதுவரை பார்க்காத ஒரு அமைதியான, வித்தியாசமான கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்க உள்ளார். தற்போது தனுஷ் அவர்கள் பல படங்களில் பிஸியாக இருப்பதால் தான் இந்த படத்திற்கான வேலைகள் தொடங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தனுஷ் அவர்கள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுருளி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து விட்டது. இந்த மாதத்தில் இந்த படத்தின் போஸ்டர்களும் வெளியாக உள்ளது. மேலும், இந்த படம் மே 1 ஆம் தேதி திரையரங்கிற்கு வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தனுஷின் 40 வது படமாகும். இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து தனுஷ் அவர்கள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 90% சதவீதம் முடிந்துவிட்டது. இது படம் முடிந்தவுடன் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம், பாலிவுட்டில் ஒரு படம் என தனுஷ் அவர்கள் பிசியாக உள்ளார். இந்த படங்கள் எல்லாம் முடிந்த பிறகுதான் பா.பாண்டி படத்தின் 2 பாகம் இயக்குவார் என்று கூறப்படுகிறது.