இந்திய சினிமா உலகில் இசையில் ஜாம்பவானாக திகழ்பவர் இளையராஜா. இவருடைய இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் கட்டிப்போட்டவர். அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தான் இவர் 1976 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் இசையமைப்பாளர், பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இவர் பாடல் வரிகளை எழுதுபவர் என்று பலருக்கும் தெரியாத ஒன்று.
இவர் எழுதிய ஒரு பாடல் வரிகளை சூப்பர் ஹிட் கொடுத்த படம் ஒன்று இடம்பெற்று இருக்கிறது. அந்த படம் ‘நான் கடவுள்’. அதுமட்டுமில்லாமல் இயக்குனர் பாலா இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த படம் நான் கடவுள். இந்த படத்தில் ஆர்யா, பூஜா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஆனால், இவர் ஒரு பாடலின் வரிகளை எழுதியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாது.
ரமணரின் தீவிர பக்தர் :
இதுகுறித்த போஸ்ட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இளையராஜா அவர்கள் மிகத் தீவிர ரமண பக்தர். இதனால் இவர் ‘ராஜாவின் ரமணமாலை’ என்ற இசைத் தொகுப்பை எழுதி இசையமைத்து பாடி இருந்தார். இந்த ரமணர் பாடலை தனது நான் கடவுள் படத்தில் பயன்படுத்திக் கொள்ள பாலா கேட்டிருக்கிறார். ஏதோ சாமி பாட்டு கேட்கிறார் என்று இளையராஜாவும் சரி என்று சம்மதம் தெரிவித்தார். பின் பாலா அவர்கள் அந்த பாடலை பிச்சைக்காரர்களின் வாழ்வியல் சொல்ல பயன்படுத்தி இருந்ததால் ‘பைத்தியக்காரா என்னடா பண்ணி வச்சிருக்க, அது ரமணர் பாட்டுடா’ என்று இளையராஜா செல்லமாக பாலாவை திட்டியிருந்தார்.
ரமணரை நினைத்து எழுதிய பாடல் :
இறைவனை நாடும் ஒரு பக்தன் இறைவனிடம் வேண்டும் அருளை யாசகமாக பிச்சையாக கருதினால் அந்த அருள் படரும் உடலானது உயிரானது பிச்சைப்பாத்திரம் அன்றோ என்ற பொருள்பட உடலை பிச்சை பாத்திரம் என்று பாடியிருந்தார் இளையராஜா. ‘பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்’ சாமான்ய மனிதன் ஒருவன் அவனுக்கான தேவையை அருளாக இறைவனிடம் பிச்சை கேட்பதும், ஏதுமற்ற ஒருவன் ஒரு வேளை உணவுக்காக அதே சாமான்ய மனிதனிடம் பிச்சை கேட்பதும் ஒன்றுதானே என்பது இங்கு வாதம்.
பிச்சைக்காரர்களுக்காக மாற்றிய பாடல் :
இருவரது உடலும் இங்கே பிச்சை பாத்திரம். வெறும் எலும்பு, சதை, நரம்பு, ரத்தம் சேர்ந்து செய்த பிச்சை பாத்திரம். ‘அம்மையும் அப்பனும் தந்ததால் இல்லை, ஆதியின் வல்வினை சூழ்ந்ததால் இம்மையை நான் அறியாததால் சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்’
இதில் வரும் சிறு பொம்மையின் நிலையினில் சொல்லாடலில் சூட்சமம் இருக்கிறது. ஓன்று தன்னையே பொம்மையாக நினைத்துக்கொள்ளலாம். இறைவன் ஆட்டுவிக்கும் பொம்மை. இரண்டாவது இறைவனை சிலையாக ஒரு பொம்மையாக கொள்வது. இளையராஜா ரமணர் எழுதிய போது முதல் பொருளும் அதையே பிச்சைக்காரர்களுக்கு எழுதியபோதும் இரண்டாவது பொருளும் மேலோங்குகிறது.
கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
‘அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்
ஒரு முறையா? இரு முறையா? பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையால பழ வினையால் கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே’
இந்த வரிகள் எல்லாம் இரண்டு நிலைக்கு பொருந்தும் படியாக இருக்கிறது. அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் கடவுளிடமும் செல்லலாம். அடுத்தவன் சேர்த்து வைத்துக் கொழுத்து கிடப்பவனிடம் கொள்ளலாம்.
‘அருள்நிறை அன்னையே ரமணன் எனும் கருணையே
உன் திரு கரம் எனை அரவணைத்து அருள் பெற பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்’
என்று ரமண மாலையில் இருந்தது.
‘அருள் விழியால் நோக்குவாய்
மலர் பாதத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை அரவணைத்து அருள் பெற பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்’
என்று நான் கடவுள் பாடலில் மாறியது.
சித்தர்களும், யோகிகளும், தத்துவம் சொல்லும் பெருங்கவிஞர்களும் எழுதக்கூடிய பாடல்களை இளையராஜா எழுதியிருக்கிறார். இப்படி ரமணர் மாலையில் இருந்த பாடலை நான் கடவுள் படத்துக்காக கொஞ்சம் மாற்றி இளையராஜா எழுதிக் கொடுத்திருக்கிறார். பலருக்கும் தெரியாத இந்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.