சாதனை மாணவர்களுக்கு விஜய் அளித்த ஊக்கத்தொகை – ஜேம்ஸ் வசந்தன் போட்ட நீண்ட முகநூல் பதிவு

0
3639
James
- Advertisement -

சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கிய நிகழ்வு குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. இந்த விவகாரம் தமிழ் சினிமா பிரபலங்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கும் நிலையில் விஜயின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் விஜய்யின் இந்த செயல் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : –

-விளம்பரம்-

- Advertisement -

234 தொகுதிகளிலும் 10, 12 வகுப்புப் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்க்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வை நடத்திய விஜய், இதைவிட வெளிப்படையாக தன் அரசியல் நோக்கத்தை மக்களுக்குச் சொல்லியிருக்க முடியாது அந்தத் துணிவிற்கும், தெளிவிற்கும், உறுதிக்கும் பாராட்டு தெரிவிக்காமல் இருக்கமுடியாது. அதைத் தேர்ந்தெடுத்த தளமும் அற்புதமானது. இது எத்தனை இளம் உள்ளங்களை உற்சாகப்படுத்தியிருக்கும், உத்வேகப்படுத்தியிருக்கும் என்பதையும் நம்மால் கணிக்க முடிகிறது.

“நீங்கள்தான் எதிர்கால வாக்காளர்கள்” என்று சொன்னதன் மூலம் இதன் பின்னணியில் இருக்கும் அவருடைய அரசியல் கணக்குகளையும் அவர் பகிரத் தயங்கவில்லை. அவருடைய தோற்றம், உடல் மொழி, பேச்சு எல்லாமே அவருடைய எண்ணங்களை கொஞ்சமும் ஐயத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தியது. பொதுநிகழ்வுகளில் தோன்றுவதற்கும், பேசுவதற்கும் கூச்சப்பட்ட காலம் போய், இன்று அரசியலுக்குள் குதித்து, தலைமையேற்க நினைக்கும் தன் விருப்பத்தை கொஞ்சமும் தயக்கமின்றி தெளிவாகச் சொல்லும் நிலைக்கு தன்னை மாற்றிக்கொண்டிருப்பது மிகப்பெரிய, உறுதியான மாற்றம்.

-விளம்பரம்-

தான் நடிக்கிற படங்களின் திரைக்கதையையே படிக்கும் ஈடுபாடு இல்லாதவர் இன்று புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன் என்று சொல்வது அவருக்குள் ஏற்பட்டிருக்கிற தேடலின் சான்று. இது பல இளைஞரை படிக்கத் தூண்டும் என்பது திண்ணம். ஒவ்வொரு நடிகரும் ஒரு காலகட்டத்தில் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கும்போது எதிர்கொள்கிற விமர்சனங்களை விஜய்யும் சந்தித்துதான் ஆகவேண்டும். அது ஏற்கனவே தொடங்கிவிட்டதாக நினைக்கிறேன்.

பொதுநலச் சிந்தனையுள்ளவர்தானே அரசியலில் ஈடுபடுவதைக் குறித்து சிந்திப்பார்? இது வரவேற்கப்பட வேண்டிய விஷயந்தானே? அரசியலில் உள்ளவரின் குடும்பத்தினர் வந்தாலும் விமர்சனம்; அரசியல் தொடர்பே இல்லாதவர் வந்தாலும் விமர்சனம் என்றால் பிறகு யார்தான் வரவேண்டும்? மக்களிடையே ஏற்கனவே செல்வாக்கு உள்ளவர் தனக்கிருக்கும் புகழையும், அந்தஸ்தையும் அவர்கள் நலனுக்கென்று செலவழிக்க நினைப்பது ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்றுதானே?

James

விஜய்யை எடுத்துக்கொண்டால், அவர் இன்று ஒரு படத்துக்கு எவ்வளவு ஊதியம் வாங்குகிறார் என்பது தெரிந்த செய்திதான். வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் செய்கிறார். தொழிலின், புகழின் உச்சத்தில் இருக்கிறார். இரண்டு மூன்று தலைமுறைகள் அமர்ந்து உண்ணக்கூடிய செல்வம் இருக்கும்போது அவர் எதற்காக அரசியலுக்கு வருவதன் மூலம் தன் வருமானத்தையும் கெடுத்துக்கொண்டு, தன் சேமிப்பையும் இழந்து, பெயரையும் கெடுத்துக்கொள்ள வேண்டும்?

இதையெல்லாம் சிந்திக்காமலா இந்த முடிவை எடுத்திருப்பார்? அப்படியென்றால், அதையும் தாண்டிய ஒரு மக்கள் நல நோக்கம் இருக்க வேண்டுமல்லவா? அவர் வருவது அவர் முடிவு. அவர் வரட்டும், பேசட்டும், செயல்படட்டும். நம்பினால் மக்கள் வாக்களிப்பர், இல்லையென்றால் ஒதுக்குவர். களத்தில் எதிர்கொண்டு அவர் கருத்துகளை விமர்சிப்பது தகுதியாயிருக்கும். வாங்க விஜய்! தமிழ் நாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல திட்டங்களை வகுங்கள்! அறிவார்ந்த தமிழ்ச்சமூகம் பொருத்தமானவரை ஆதரிக்கும்!

Advertisement