இயக்குனர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் பில்லா. ரஜினிகாந்த் அவர்களின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது பில்லா படம். இந்த படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஹீரோயினியாக முதலில் நடிக்க இருந்தது நடிகை ஜெயலலிதா தான். அதற்கு பின் தான் ரஜினியின் ஜோடியாக ஸ்ரீபிரியா அவர்கள் நடித்தார். அந்த சமயத்தில் தான் நடிகை ஜெயலலிதா அவர்கள் சினிமாத்துறையிலிருந்து மெல்ல மெல்ல விலகி அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஆனால், நடிகை ஜெயலலிதா அவர்கள் சினிமாவில் வாய்ப்பில்லாத காரணத்தினால் தான் அரசியலில் நுழைந்திருக்கிறார் என்று ஒரு பத்திரிகை எழுதி இருந்தார்கள்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக நடிகை ஜெயலலிதா அவர்கள் ஒரு கடிதத்தை அந்தப் பத்திரிகைக்கு எழுதினார். அதில் அவர் கூறியது, சினிமாவில் மீண்டும் நடிப்பதற்கு நான் போராடவில்லை. உண்மையில் படத்தில் நடிக்க சொல்லி நல்ல வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. பில்லா படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி என்னை தான் முதலில் அணுகினார். நான் மறுத்ததால் தான் அந்த கேரக்டரில் ஸ்ரீப்ரியா நடித்தார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினி தான் பில்லா படத்தின் ஹீரோ. ஆனாலும், நான் நடிக்க மறுத்தேன். சினிமா வாய்ப்புக்காக போராடியிருந்தால் அதனை ஏற்று நடித்திருப்பேனே. ஆனால், எனக்கு நடிப்பில் இருந்த ஆர்வம் போய்விட்டது என்று கூறி இருந்தார். மேலும், ரஜினிகாந்த் அவர்கள் வளர்ந்து கொண்டிருந்த காலம் அது. அப்போது திடீரென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சினிமாவில் இருந்து விலகப் போவதாக ஒரு அறிவிப்பு வந்தது. பத்திரிக்கையாளரை ரஜினிகாந்த் அவர்கள் அடிக்க பாய்ந்தார், விமான நிலையத்தில் குடிபோதையில் கண்ணாடி கதவுகள் எல்லாம் உடைத்தார் என்று பல்வேறு விதமான வதந்திகளும் சர்ச்சைகளும் வெளிவந்தன.
இந்த சூழலில் ரஜினிகாந்த் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சினிமாவிலிருந்து விலகுவதாக கூறினார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியிலும், சினிமா துறையிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பாலச்சந்தர் அவர்கள் அவரிடம் பேசி அவருடைய முடிவை மாற்றினார். இந்த சமயத்தில் தான் பில்லா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படம் வெளியாகி 25 வாரங்களுக்கு மேல் ஓடி நல்ல வசூலையும் பெற்று குவித்தது. அதற்குப் பிறகு தான் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த பல திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்து ரஜினிகாந்த் அவர்கள் நடித்தார். அமிதாப் பச்சன் நடித்த படம் என்றாலும் ரஜினிகாந்த் அவர்கள் அவருடைய ஸ்டைலில் பட்டையைக் கிளப்பினார். 1978 ஆம் ஆண்டு டான் என்ற பெயரில் இந்தியில் வெளியான படத்தின் ரீமேக் தான் பில்லா என்பது குறிப்பிடத்தக்கது.