பிரபல நடிகர் மம்மூட்டிக்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்திற்காக தேசிய விருது வழங்கப்படாத காரணம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் வருடம் வருடம் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதை முதன்முதலாக 1954 ஆம் ஆண்டுதான் தொடங்கி இருந்தார்கள். தற்போது 70 ஆவது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் 70ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியல் வெளியாகியிருந்தது. இதில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய படங்களுக்கான தேசிய விருதுதான் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஒவ்வொரு வருடமும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர் என பல பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் அதிகமான விருதுகளை ‘காந்தாரா’ படம் தான் பெற்று இருக்கிறது.
70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள்:
தமிழில் பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம் படங்களுக்கு ஆறு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு மட்டும் நான்கு விருதுகள் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
சிறந்த நடிகருக்கான விருது:
இதனிடையே, 2022 ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகருக்கான விருது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்திற்காக மம்மூட்டிக்கோ அல்லது ‘காந்தாரா’ படத்திற்காக ரிஷப் ஷெட்டிகோ வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி (காந்தாரா), சிறந்த நடிகையாக நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனால், மலையாள திரை உலக ரசிகர்கள் மம்முட்டிக்கு ஏன் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படவில்லை என்று கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
மம்மூட்டிக்கு விருது கிடைக்காததின் காரணம்:
இந்நிலையில், இது குறித்து தேசிய திரைப்பட விருதுகள் நடுவர் குழுவில் இருந்த நடிகர் M.B. பத்மகுமார் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், நடிகர் மம்மூட்டி நடித்துள்ள ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ ஒரு நல்ல திரைப்படம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்தப் படத்தில் மம்மூட்டியின் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. ஆனால், அந்த படத்திற்கு எந்த விருதும் கிடைக்காததற்கு காரணம் என்னவென்றால், அப்படத்தை விருதிற்கு யாரும் சமர்ப்பிக்கவில்லை.
படத்தை யாரும் சமர்ப்பிக்கவில்லை:
மேலும், தேசிய விருதுக்காக அப்படத்தின் தரப்பில் இருந்து எந்த வித முன்னெடுப்புகளும் எடுக்கப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென்று எங்களுக்கு தெரியாது. ஆனால், ‘ நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தை விருதிற்கு யாரும் சமர்ப்பிக்கவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு அரசியல் அழுத்தங்கள் எதுவும் காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், வேறு தளங்களில் இருந்து வேண்டுமானால் ஏதாவது அழுத்தங்கள் வந்திருக்கலாம்’ என்று கூறியுள்ளார்.