கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சுதீப். இவர் கன்னட மொழியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், இவர் தனது அறக்கட்டளை மூலம் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளுக்கும், ஏழை எளியோருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் கூட நடிகர் சுதீப் அவர்கள் தனது சொந்த ஊரான ஷிவமோகாவில் 133 வருட பழமையான அரசு பள்ளியை தத்தெடுத்தார்.

அதுமட்டும் இல்லாமல் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்தார். பின் பள்ளியின் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். இப்படி நடிகர் சுதீப் அவர்கள் நடிப்பு மட்டுமில்லாமல் பல சமூக சேவைகளை செய்து வருவதால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று சுதீப் அவர்கள் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதைத் தொடர்ந்து சுதீப்பின் ரசிகர்கள் மாநிலம் முழுவதும் உற்சாகமாக சுதீப் பிறந்த நாளை கொண்டாடி வந்தார்கள்.

Advertisement

இந்த நிலையில் பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்ற கிராமத்தில் சுதீப் ரசிகர் நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடி அவருக்கு கட்டவுட் வைத்து சுதீப் பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். அப்போது சில ரசிகர்கள் எருமை மாட்டை அழைத்து வந்து பலி கொடுத்து அந்த ரத்தத்தை சுதீப் கட்டவுட் மீது தெளித்து வழிபாடு செய்துள்ளனர். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பெல்லாரி நகர் காவல் நிலையத்தில் சுதீப் ரசிகர்கள் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாகவே சினிமா பிரபலங்களுக்கு ரசிகர்கள் கேக் வெட்டி, பால் அபிஷேகம், அன்னதானம், ரத்ததானம் செய்வது வழக்கம். ஆனால், இது போன்று பிற விலங்குகளை பலியிடுவது தவறான செயல் என்றும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement
Advertisement