அரசியல் பிரபலம், தொல் திருமாவளவன் நடித்திருக்கும் படங்கள் குறித்த செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள அங்கனூர் கிராமத்தில் ஆகஸ்ட் 17ஆம் தேதி, 1962 ஆம் ஆண்டு ராமசாமி, பெரியம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் திருமாவளவன். இவர் சாதி, மத அடையாளமற்ற தமிழ்ப் பெயரிடலை வலியுறுத்தி, கட்சித் தொண்டர்களோடு சேர்ந்து, தன் தந்தையின் பெயரையும் தொல்காப்பியன் என்று தமிழில் மாற்றி தொல். திருமாவளவன் ஆனார்.
மேலும், இவர் தனது சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பி.யூ.சி, சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வேதியியல், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை குற்றவியல் பயின்றார். அதற்குப் பின் 1988 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார். அதனைத் தொடர்ந்து அரசு தடயவியல் துறையில் அறிவியல் உதவியாளராக 1999 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
திருமாவளவன் குறித்து:
பின், இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இதற்கிடையே இவர் அம்பேத்கரின் மனைவி சவீதா ஆரம்பித்த ‘பாரதீய தலித் பேந்தர்’ (ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்) அமைப்பின் தமிழக அமைப்பாளரான மலைச்சாமியுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக, 1988ல் தன்னை அவ்வமைப்பில் இணைத்துக் கொண்டார். பின், மலைச்சாமியின் மறைவிற்குப் பிறகு அந்த அமைப்பின் அமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி:
அதோடு ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலை சிறுத்தைகள் என பெயர் மாற்றிய திருமாவளவன், நீளம் மற்றும் சிவப்பு வண்ண பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மதுரையில் அக்கொடியை ஏற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்தபோது 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் நாள் தொல் திருமாவளவன் தனது அரசுப் பணியைத் துறந்தார்.
அரசியல் வாழ்க்கை:
மேலும், 1999 இல் நடந்த மக்களவைத் தேர்தலில் த.மா.கா உடன் கூட்டணி வைத்து, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன், தற்போது வரை தமிழ்நாட்டில் ஒரு முக்கிய அரசியல்வாதியாக இருக்கிறார். பறையர் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடும் நடத்துதல், தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல், சாதிய அடக்குமுறைக்கு எதிராக கருத்திடுதல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தனித்தமிழீழக் கொள்கைக்கும் ஆதரவளித்தல், இந்துத்துவ கொள்கையினை எதிர்த்தல் போன்றவை திருமாவளவனின் முக்கியக் அரசியல் கொள்கைகள் ஆகும்.
மூத்த நடிகர் திருமாவளவன் அவர்கள் 😂
— Καʀαƞ 🎖️ (@JDKaranGOAT) November 12, 2024
1,அன்பு தோழி
2,மின்சாரம்
(தமிழக முதல்வர் ஆக நடித்துள்ளார் )
pic.twitter.com/Bduv4yvp30
நடிகர் திருமாவளவன்:
அதோடு திருமாவளவன் தமிழ் திரைப்படங்கள் சிலவற்றிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது முதல் திரைப்படம் ‘அன்புத்தோழி’ ஆகும், இதில் இவர் கிளர்ச்சித் தலைவர் வேடம் ஏற்று நடித்திருக்கிறார். இது தவிர கலகம், என்னை பார் யோகம் வரும், மின்சாரம் ஆகிய திரைப்படங்களிலும் திருமாவளவன் நடித்துள்ளார். குறிப்பாக மின்சாரம் என்னும் படத்தில் தமிழக முதலமைச்சராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவர் நடித்த படங்களின் துண்டு வீடியோக்கள் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.