400 ரூபாயில் தன்னுடைய சம்பளத்தை தொடங்கி இன்று 45 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டி வரும் தொழிலதிபர் செல்வகுமார் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். மாருதி பவர் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் மற்றும் கிரேட் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் தான் செல்வகுமார். அதுமட்டுமில்லாமல் இவர் ஆனந்தம் அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். நாகப்பட்டினம் அருகே உள்ள ஒரு சிறிய ஊரில் பிறந்தவர் செல்வகுமார். அந்த சிறிய ஊரில் 12 குடும்பங்கள் மட்டும் தான் இருந்தது. அப்படி இருந்தும் இவர் தன்னுடைய தொடக்கக் கல்வியை முடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் உயர்நிலைப் பள்ளி படிக்க அருகே உள்ள நகரத்திற்குச் சென்றார். பின் செல்வகுமார் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் டிப்ளமோ படிக்க சென்றுவிட்டார். மேலும், படிப்பை முடித்தவுடன் இவர் சென்னையில் வேலை தேடி அலைந்தார்.

அப்போது ஒரு சிறிய நிறுவனத்தில் இவர் வேலைக்கு சேருகிறார். ஆனால், அந்த வேளையில் அவரால் நீண்ட காலம் இருக்க முடியவில்லை. பின்னர் 1994 ஆம் ஆண்டு அம்பத்தூர் எஸ்டேட்டில் வேலை தேடி அலைந்தார். இவர் டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் படித்ததனால் இவருக்கு ரிச்சி சாலையில் உள்ள யுபிஎஸ் மற்றும் இன்வெர்ட்டர் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. வேலையில் சேர்ந்த சில மாதங்களிலேயே இவர் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் யுபிஎஸ் சர்வீஸ்ஸில் வேலை செய்கிறார். அப்போது அவருடைய முதல் சம்பளம் 400 ரூபாய். வெளியூர்களில் போய் வேலை சேர்ந்தால் ஒரு நாளைக்கு 75 தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் கொடுப்பார்கள்.

Advertisement

ஆனால், அந்த பணம் சாப்பாட்டிற்கும் தங்குமிடத்துக்கு செலவாகும் என்பதால் இவர் பேருந்து நிலையங்களில் தங்கி அங்கிருக்கும் அரசு பாத்ரூமில் குளித்து தயார் ஆகுவார். அங்கு கிடைத்த அனுபவம் மூலம் தான் இவர் ஆனந்தம் அறக்கட்டளை தொடங்க காரணமாக இருந்தது என்றும் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும், தமிழகம் முழுவதும் யுபிஎஸ் சர்வீஸ் செய்த அனுபவத்தில் இவருக்கு டெல்லியில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. அதனை தொடர்ந்து செல்வகுமார் 1996 ஆம் ஆண்டு 40 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் குடியிருந்த அறையிலேயே அசெம்பிளி யூனிட் தொடங்குகிறார். ஆரம்பத்தில் இவர் வீடுகளுக்கு தேவையான இன்வெர்ட்டரை செய்யத் தொடங்கினார். அடுத்து நிறுவனங்களுக்கு தேவையான யுபிஎஸ் சேவையைத் தொடங்கினார். அதன் பிறகு எக்சைட் உள்ளிட்ட சில பேட்டரி நிறுவனத்தின் டிஸ்டிபுடர் ஆக மாறினார். இதனை தொடர்ந்து சோலார் பேனல் அமைத்து கொடுக்கும் சேவை செய்தார். கடைசியாகத்தான் சிசிடிவி வளர்ந்து வரும் துறை என்பதால் சிசிடிவி தேவையிலும் இறங்கி தொழிலை செய்தார்.

இப்படி இவருடைய வளர்ச்சியினால் கடந்த நிதியாண்டில் மட்டும் 45 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைத்தது. பின்னர் இவர்கள் செய்யும் தொழிலில் பல யுக்திகளையும் திட்டங்களையும் கையாண்டு இவர்களுடைய தொழிலை விரிவுபடுத்தினார். மேலும், இவர் சரியான யுத்தியை சரியான நேரத்தில் பயன்படுத்துவதால் தான் அடுத்தடுத்த கட்டத்திற்கு இவர் திட்டத்தை கொண்டு செல்ல முடிந்தது. அதேபோல் எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் ’கிரோட் வொர்க்ஸ்’என்ற நிறுவனத்தை இவர்கள் தொடங்கினார்கள். மார்க்கெட்டிங் யுக்தியை எப்படி உருவாக்குவது, பணிகள் இடத்தில் எப்படி ரிப்போர்ட் வாங்குவது, மனித வளம் குறித்த கொள்கை, அடுத்த ஐந்தாண்டு திட்டம் என பல விஷயங்கள் குறித்து சில நிறுவனங்களுக்கு இந்த ’கிரோட் வொர்க்ஸ்’ மூலம் ஆலோசனை வழங்குகிறார்கள்.

Advertisement

தற்போது 25க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிகிறார்கள். இது ஒரு பக்கமிருக்க 1994 ஆம் ஆண்டு வேலைக்கு சென்ற போது ஒவ்வொரு ஊர்களிலும் பேருந்து நிலையத்தில் தங்கி தான் தன் தொழில் முன்னேறினார். பொதுவாகவே பேருந்து நிலையத்தில் தங்குபவர்கள் எல்லாம் படிக்க தெரியாதவர்கள் என்று கிடையாது மன ரீதியாகவும், பண ரீதியாகவும் பல பிரச்சினைகளில் தங்குகிறார்கள். இந்த பிரச்சனையை தீர்க்க தான் இவர் ஆனந்தம் அறக்கட்டளை தொடங்கினார். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நன்றாக படிக்கும் குழந்தைகளின் மேற்படிப்பை இந்த அறக்கட்டளை படிக்க வைக்க உதவி செய்தார்கள். நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் மாணவர்களுக்கு மேல் மேற்படிப்புக்கு செல்லாமல் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் படிப்பு அவர்களுக்கு வரவில்லை என்றில்லை.

Advertisement

பண வசதி இல்லாமல் தான். அதற்காகத்தான் இந்த அறக்கட்டளையை தொடங்கினார்கள். இதுவரை 620 மாணவர்களுக்கு மேல் ஆனந்தம் அறக்கட்டளை மூலமாக படித்திருக்கிறார்கள். இதில் 240 மாணவர்களுக்கு மேல் படித்து வேலைக்கு சென்று இருக்கிறார்கள். தொழிலில் கிடைக்கும் வெற்றியை விட தனி நபரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் தான் மிகப்பெரிய சாதனை, சந்தோஷம் என்று செல்வகுமார் நிரூபித்துவிட்டார். அதோடு தொழில் சார்ந்த லட்சியத்தோடு சமூகம் சார்ந்த லட்சியமும் தானாக வளரும் என்பதற்கு இவர் ஒரு முன் உதாரணமாக திகழ்ந்து இருக்கிறார். இவருடைய சமூக நல உள்ளத்தால் மேன்மேலும் தொழிலில் வெற்றியடைய பல உள்ளங்கள் வாழ்த்தி வருகின்றது. அதோடு தமிழக அரசின் உயரிய விருதான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதினை தமிழக அரசு கடந்த ஆண்டு இவருக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement