குடும்பத் தகராறு காரணமாக, இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம், கம்பம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் அழகுதுரை. கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாகப் பணியாற்றிவருகிறார். இவருக்கும் இவரது மனைவி ஜெயமணி என்பவருக்கும் குடும்பப் பிரச்சனைகள் இருந்துவந்துள்ளன. இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார் அழகுதுரை. வீடு பூட்டிக்கிடந்துள்ளது.
மனைவி, அவரின் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார் என்று நினைத்து, மீண்டும் காவல் நிலையத்துக்குச் சென்றுவிட்டு, இரவு 7.30 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதும் வீடு பூட்டியே இருந்துள்ளது. சந்தேகமடைந்த அழகுதுரை, தனது மாமியார் வீட்டுக்கு போன் பண்ணி விசாரித்துள்ளார். அங்கே, ஜெயமணி வரவில்லை என்று கூறியுள்ளனர். பின்னர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஜெயமணி தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்துகொண்டுவிட்டார். வீட்டினுள் இருந்த தண்ணீர்த் தொட்டியில், தேஜாஸ்ரீ (8 வயது), காசி விஸ்வநாதன் (3 வயது) இருவரும் இறந்துகிடந்துள்ளனர். சம்பவம் அறிந்து, உத்தமபாளையம் துணைக்காவல் கண்காணிப்பாளர் விரைந்து வந்தார். உடல்கள் மீட்கப்பட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
செயின் பறித்த ஆம்புலன்ஸ் ஓனர்:
இறந்த ஜெயமணி மற்றும் அவரது குழந்தைகளின் உடல்கள், கம்பத்தைச் சேர்ந்த சிவா ஆம்புலன்ஸ் என்ற தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டன. அப்போது, ஆம்புலன்ஸ் உரிமையாளரான சிவா என்பவர், ஜெயமணியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளார். அதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், சிவாவைக் கடுமையாகத் தாக்கி, போலீஸில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் பேசியபோது, “ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிவா கைது செய்யப்பட்டு, அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆம்புலன்ஸ் லைசென்ஸை ரத்துசெய்வது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது” என்றார். இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சூழலில், இப்படி ஒரு சம்பவம் நடந்தது கம்பம் பகுதி மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.