இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. . ‘800’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எம். எஸ். ஸ்ரீபதி இயக்க, டார் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதனிடையே முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதராவானவர் எனக்கூறி பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து முதன் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் முத்தையா முரளிதரன்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் ‘இதுநாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்து வந்துள்ளேன் அது விளையாட்டு ஆனாலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான  800 திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூறி விரும்புகிறேன். என் பெற்றோர், என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் உள்ளிட்ட பலராலும் உருவாக்கப்பட்டவன் நான். எனவே அதற்கு காரணமானவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்து தான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன். இலங்கையில் தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலில் பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவழியான மலையக தமிழர்கள் தான்.

Advertisement

70கள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு, ஜே வி பி போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். என் 7 வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். என் சொந்தங்களில் பலர் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். எனவே போரால் நிகழும் இழப்பு, அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்குத் தெரியும். 30 வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை. அதன் மத்தியில் தான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்றது.இந்த சூழலில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதித்தேன் என்பது பற்றிய படம் தான் 800.

நான் 2009ஆம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019ல் கூறியதை தமிழர்களை கொன்று குவித்த நாள் தான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று திரித்து எழுதுகிறார்கள். போர் முடிவுற்றது ஒரு சராசரி மனிதனாக பாதுகாப்பான உணர்வு மட்டுமல்லாது, கடந்த 10 ஆண்டுகளாக இருபுறமும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை வைத்தே 2009 ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்ற கருத்தைத் தெரிவித்தேன்.ஒருபோதும் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை. ஆதரிக்கவும் மாட்டேன்.

Advertisement

எனது பள்ளி காலம் முதல் நான் தமிழ்வழியில் படித்து வளர்ந்தவன். எனக்கு தமிழ் தெரியாது என்பது மற்றொரு தவறாகும். ஒரு மலையக தமிழனாக நான் என் மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும் ஈழ மக்களுக்கு செய்த உதவிகளே அதிகம். ஐநாவில் உணவு தூதராக இருந்த போது 2002ல் LTTE கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கும் அந்த திட்டத்தை எடுத்துச் சென்றது முதல் சுனாமி காலங்களில் பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நான் செய்த உதவிகள் வரை மக்கள் அறிவர்.போர் முடிவுற்ற பின்னர் கடந்த 10 வருடங்களாக எனது தொண்டு நிறுவனமான Foundation of Goodness மூலம் ஈழ மக்களுக்கு செய்யும் உதவிகள் தான் அதிகம். நான் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்திலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்திருந்தால் நான் இந்திய அணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன். இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா? சிலர் அறியாமையாலும், சிலர் அரசியல் காரணத்திற்காகவும் என்னை தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்பது போல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது. எவ்வளவு விளக்கமளித்தாலும் எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும், என்னைப் பற்றி ஒரு பக்கம் தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வரும் நிலையில் நடுநிலையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இந்த விளக்கத்தை அளிக்கிறேன் ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement