பொன்னியின் செல்வன் படத்திற்காக தேசிய விருது வாங்கிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வருடம் வருடம் இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு தான் தொடங்கி இருந்தார்கள். தற்போது 70 ஆவது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற இருக்கிறது. இதில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய படங்களுக்கான தேசிய விருது தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த வருடம் அதிகமான விருதுகளை காந்தாரா படம் தான் பெற்று இருக்கிறது. தமிழில் பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம் படங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். இவருடைய படைப்புகளில் நீண்டகால கனவு படமான பொன்னியின் செல்வன் படம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்திருந்தது. தமிழ் சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் கொடுத்திருந்தார்.
70வது தேசிய விருது :
தற்போது இந்த படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் முதல் பாகம் வென்றிருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைத்த இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்திருக்கிறது. பின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ரவிவர்மன் வாங்கி இருக்கிறார். இது தவிர சிறந்த ஒலி அமைப்புக்கான விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு கிடைத்திருக்கிறது. இதை தொடர்ந்து தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகை நித்யா மேனன், சிறந்த நடன இயக்குனர் ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணனுக்கு தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது.
பொன்னியின் செல்வன் :
தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படைப்புகளில் ஒன்றான அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தவர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. அதனைத் தொடர்ந்து இவர் மே மாதம், சதிலீலாவதி, ஆசை தளபதி போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார்.
ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி குறித்த தகவல் :
குறிப்பாக இவர் கமலஹாசன் நடிப்பில் வெளியாகி இருந்த சதிலீலாவதி படத்தில் தான் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது. அதற்குப் பின் இவர் சென்னை லயோலா கல்லூரியில் காட்சி தொடர்பியல் சம்பந்தமான படிப்பை படித்து முடித்தார். பின்பு இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மீடியாவில் முதுகலைப் பட்டமும் பெற்றிருந்தார். இதனைத்தொடர்ந்து இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் சில வருடங்கள் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார்.
So @mdeii wins the National Award for Best Sound Design in Ponniyin Selvan. Back during the film's release, at @TheOtherBanana we spoke to him about the film, the art of sound design, AR Rahman and more. Listen off!https://t.co/FG0P3B5bWnhttps://t.co/2128j1Tzh5
— Aditya Shrikrishna (@gradwolf) August 16, 2024
ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி கிடைத்த விருது :
பின் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த உன்னைப் போல் ஒருவன் என்ற படத்தில் வசனம் மற்றும் ஒலி அமைப்பியலிலும் பணியாற்றி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் மன்மதன் அம்பு, விஸ்வரூபம், ஓ காதல் கண்மணி, செக்க சிவந்த வானம், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களில் சவுண்ட் இன்ஜினியராகவும் பணியாற்றி இருந்தார். தற்போது இவர் கமல், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் படத்திலும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது இவருக்கு பொன்னியின் செல்வன் படத்தில் சிறந்த ஒலி அமைப்பு பிரிவிற்காக தேசிய விருது கிடைத்திருக்கிறது.