தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுஜாதா. இவர் பெரும்பாலும் படங்களில் அம்மா, அண்ணி, அக்கா போன்ற வேடங்களில் தான் அதிகம் நடித்திருக்கிறார். கமல்ஹாசன் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த விருமாண்டி என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு 2007ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் சுஜாதா. இதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.
சோசியல் மீடியாவில் வந்த வதந்தி :
அதுமட்டும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சசிகுமார், உதயநிதி என பல நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். மேலும், இவருடைய மதுரை மண்ணின் மொழி மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டார். இருந்தாலும் இவரைப் பற்றி சில வதந்திகள் சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கின்றன. சமீபகாலமாகவே நடிகை சுஜாதா குடும்பத்தை கவனிப்பதில் அதிக ஆர்வம் செலுத்துவதாகவும், இதனால் நடிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் என்றும், அது மட்டுமில்லாமல் இவர் கைவசம் எந்த படங்களும் இல்லை என்றும் சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கிறது.
நடிப்பில் இருந்து விலகலா ?
இது குறித்து சமீபத்தில் நடிகை சுஜாதா கூறியிருப்பது, நான் இதுவரை 90 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன். கூடிய விரைவில் நுறை தொட இருக்கிறேன். என்னுடைய கணவரின் நண்பர் மூலம் தான் எனக்கு விருமாண்டி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன். அந்த படத்திற்கு பிறகு வந்த வாய்ப்புகளில் நான் நடிக்க முடியாமல் போனது. என்னுடைய மகள் கொஞ்சம் வளர்ந்தவுடன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். எல்லோரையும் போல எனக்கும்பருத்திவீரன் ஒரு பெரிய அடையாளம் தான்.
வதந்திகளுக்கு விளக்கம் :
இந்த படத்தை தொடர்ந்து நான் பல படங்களில் நடித்தேன். அதோடு சமீபகாலமாகவே நான் படங்களில் நடிப்பதில்லை என்று பலரும் கூறுகிறார்கள். எப்படி இந்த செய்தி வந்தது என்று எனக்கு தெரியவில்லை. இது யார் அவிழ்த்து விட்ட கதை என்று தெரியவில்லை. எனக்கு யார் மீதும் வெறுப்புமில்லை விரோதிகளும் இல்லை. அப்புறம் எப்படி இப்படி வருகிறது? என்பது தான் புரியவில்லை. அண்மையில் வெளியான ஜெய் பீம் படத்தில் கூட நான் நடித்தேன். அந்த படத்தில் நகை காணாமல் போகும் நபராக நான் நடித்தேன். அந்த படம் பற்றி இப்போது நாடே பேசிக்கொண்டிருக்கிறது.
தற்போது நடித்து வரும் படங்கள் :
இப்படி நான் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இருந்தாலும் என்னைப் பற்றி பல வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் நான் நடித்த ஆனந்தம் விளையாடும் வீடு படம் வர இருக்கிறது. அதை தொடர்ந்து வேலன், மதுரை மணிக்குறவன் என இரண்டு படங்களுமே ஒரே மாதத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது மட்டுமில்லாமல் நான் நடித்து முடித்த சில படங்களும் வெளிவர இருக்கிறது. அதனை தொடர்ந்து நான் சில படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். மேலும், நான் மதுரையில் இருந்து கொண்டுதான் படங்களில் நடித்து வருகிறேன். இதை அறிந்து கொண்டு தான் எனக்கு திரைப்பட வாய்ப்புகளும் வருகின்றன.
ஆனந்தம் விளையாடும் வீடு :
கொரோனா காலத்தில் உலகமே வேலை இல்லாமல் மூழ்கியபோது தான் நானும் நடிக்காமல் இருந்தேன். குடும்பத்துக்காக நடிப்பை தவிர்க்கிறேன் என்பதெல்லாம் தவறு. எனக்கு குடும்பமும் முக்கியம் அதேபோல் நடிப்பும் முக்கியம். குடும்பத்தை கவனித்துக் கொண்டு தான் 90 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் என்னுடைய மகள்கள் இப்போது வளர்ந்து விட்டார்கள். அதனால் எனக்கு குடும்ப பொறுப்பு கொஞ்சம் குறைந்திருக்கிறது என்று சொல்லலாம். அதனால் படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டுதான் இருக்கிறேன். இந்த பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.