திருவண்ணாமலையில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டன் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டிப்போட்டு இருந்தது. கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்களும்,ரசிகர்கள், பொது மக்கள் என அனைவரும் இரங்கல் பொது இருந்தார்கள். விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே விஜயகாந்தினுடைய பணியை பாராட்டி, ‘பத்மபூஷன்’ விருது அவர் மறைவதற்கு சில மதங்களுக்கு முன்பே இந்திய அரசு அறிவித்து இருந்தது. அந்த விருதை அவரின் மறைவிற்குப் பிறகு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி மர்முவிடம் பெற்றுக் கொண்டார் . இதற்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல், தேமுதிக தொண்டர்களும் வாழ்த்தி சந்தோஷப்பட்டு இருந்தார்கள்.
விஜயகாந்த் குறித்த தகவல் :
மேலும், விஜயகாந்த் அவர்கள் நடிப்பையும் தாண்டி பெரிய ஹீரோ என்ற தலைக்கனம் இல்லாதவர். அனைவருடனும் சேர்ந்து பழகி உண்ணும் குணம் கொண்டவர். பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உதவி செய்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு ஆரம்பத்தில் உதவி இருந்தது விஜயகாந்த் தான். இப்படி இருக்கும் நிலையில், அவர் மறைந்து சில மாதங்கள் ஆன பிறகும் அவரை குறித்த செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
விஜயகாந்த் குருபூஜை :
இதற்கிடையே கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து ஒரு வருடம் ஆன நிலையில் சமீபத்தில் அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளில் தேமுதிக தொண்டர்கள் பெரிய அளவில் கூடி கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் மட்டுமில்லாமல் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். மேலும், நினைவஞ்சலி கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் பிரேமலதா நன்றி தெரிவித்திருந்தார்.
திருவண்ணாமலை பிரேமலதா :
இந்நிலையில் சமீபத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்திருந்தார். அதற்குப் பிறகு தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட கட்சி பொதுக்கூட்டத்தில் திருவண்ணாமலை மக்களுக்காக கேப்டன் விஜயகாந்த் செய்த விஷயங்கள் குறித்து பேசி இருந்தார் . அதில், செம்மரக்கட்டை வெட்டி நம்ம தமிழ் மக்கள் ஆந்திராவில் போய் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டாங்க, யோசிங்க. அதை நம்ம மறந்திடக் கூடாது. செம்மரக்கட்டையை வெட்டியதால் ஜெயிலில் அடைக்கப்பட்டு எவ்வளவோ இன்னல்களை நம்ம தமிழ் தோழர்கள் சந்தித்தார்கள். ஏன், அந்த அவலம்.
உண்மையான புஷ்பா கேப்டன் தான் :
ஏனென்றால், வேலைவாய்ப்பு இல்லை. திருவண்ணாமலையில் வேலை வாய்ப்பு இல்லாததுனால, பக்கத்து மாநிலத்துக்கு போய் செம்மரக்கட்டையை வெட்டும் நிலைமையை ஏற்படுத்தியது இந்த ஆட்சியால் தான். ஆனால், பொய் பேசி ஏமாற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் நான் இருக்கிறேன். உங்கள் வீட்டுப் பையனாக, நான் இருக்கிறேன் உங்கள் பாதுகாவலராக என்று சொல்லி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பங்களுக்கு நேரடியாக கேப்டனே சென்று நிதி உதவி வழங்கி, அவர்களுடைய துயரிலே பங்கேற்று, உண்மையாக தெய்வமாக வாழ்ந்தவர் நம்ம கேப்டன் அவர்கள். இன்னைக்கு அந்த செம்மரக்கட்டையை வைத்து படம் எடுத்திருக்கிறார்கள். என்ன படம்னா ‘புஷ்பா 1’ மற்றும் ‘புஷ்பா 2’. ஆனா, உண்மையான புஷ்பா நம்ம கேப்டன் தான். கேப்டன் ஒரு சிங்கம். இந்த தமிழ்நாட்டின் உண்மையான சிங்கம் நம்ம கேப்டன் தான் என்று பேசியிருக்கிறார்.