ஹேமா கமிட்டி குறித்து ரஜினிகாந்தின் பதிலுக்கு, நடிகை ராதிகா கூறியிருக்கும் கருத்து தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது.
பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். அதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பின் கடந்த 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
ஹேமா கமிட்டி அறிக்கை:
இது குறித்து கேரள சினிமாவில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இந்த ஹேமா கமிட்டி விவகாரம் தொடர்பாக இதுவரை மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டி எதுவுமே பேசவில்லை. இதை அடுத்து மலையாள திரைப்பட சங்கமான அம்மா சில தினங்களுக்கு முன்பு தான் கலைக்கப்பட்டது. பாலியல் புகார் குறித்து ஆலோசிக்க அம்மா சங்கம் கூடுவதாக இருந்த நிலையில் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள் ராஜினாமா செய்து விலகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்கள் கருத்து:
இதை அடுத்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதோடு நடிகைகள் பலருமே முன்னணி நடிகர்களின் மீது புகார்கள் அளித்து வருகிறார்கள். போலீஸ் இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஹேமா கமிட்டி போல் ஒரு குழு அமைக்க வேண்டும் என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கூறி இருக்கிறார். அதோடு இன்னும் சில தினங்களில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் சொன்னது:
சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம், கூலி திரைப்படம் உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. மற்ற எல்லாவற்றையும் பற்றி பேசும்போது மிகவும் மகிழ்ச்சியாக பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், ஹேமா கமிட்டி அறிக்கையைப் பற்றி மற்றும் அறியாதவாறு பதில் அளித்துள்ளார். அதாவது, தமிழ் திரையுலகில் ஹேமா கமிட்டி போல குழுவை அமைக்க வேண்டுமா என்று ஒரு நிபுணர் கேட்டதற்கு, ‘ எனக்குத் தெரியாது. அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, மன்னிக்கவும்’ என்று பதிலளித்திருந்தார்.
ராதிகா கருத்து:
அதனைத் தொடர்ந்து, தற்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராதிகாவிடம், ஹேமா கமிட்டி குறித்து ரஜினி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு ராதிகா, ‘உங்களுடைய மௌனம் தவறாக புரிந்து கொள்ளப்படும்’. இதைப் பற்றி என்ன சொல்லணும்னு நினைக்க வேண்டாம். நான் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக எல்லோர் கூடவும் சேர்ந்து செயல்படுவேன்னு சொல்லலாம். பெரிய நடிகைகள் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு அனைத்து ஹீரோக்களுக்கும், இயக்குனர்களுக்கும் தெரியும். அவர்கள் எல்லாம் வந்து பெண்களுக்காக பேசினால் சந்தோஷமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.