‘கேம் சேஞ்சர்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ராம் சரண், ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணை புகழ்ந்து பேசி இருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் படம் தான் கேம் சேஞ்சர். இந்தப் படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். ராம்சரணுடன் இணைந்து கியாரா அதவானி, எஸ் .ஜே .சூர்யா, சமுத்திரக்கனி, சுனில், அஞ்சலி, உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கேம் சேஞ்சர் படத்தின் கதையை கொஞ்சம் டெவலப் செய்து சங்கர் இயக்கியிருக்கிறாராம். மேலும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தின் வேலைகள் பட்ஜெட்டில் 2021 ஆம் ஆண்டு தொடங்கியது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக உருவான இப்படம் வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு உலக அளவில் வெளியாக காத்திருக்கிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
கேம் சேஞ்சர் :
இந்நிலையில், கேம் சேஞ்சர் திரைப்படத்தின் பிரம்மாண்ட பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ராஜமுந்திரியில் நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பவன் கல்யாண் கலந்துக் கொண்டார். அவர் துணை முதல்வராக பதவி ஏற்றப் பிறகு கலந்துக் கொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி இதுதானான் என்பதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ராம் சரண், இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் கூடியிருக்கும் இந்தப் பெரிய கூட்டத்தை பார்க்கும் போது, ராஜமுந்திரி பாலத்தில் துணை முதல்வர் பவன் கல்யாணி முதல் தேர்தல் பேரணியை நியாபகப்படுத்துகிறது.
ராம்சரண் பேசியது:
மேலும், அந்தக் கூட்டத்தில் மக்கள் கடல் போல திரண்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்ததற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அந்த திரைப்படத்தில் கேம் சேஞ்சராக நடித்திருக்கலாம். ஆனால், பவன் கல்யாண் தான் இந்திய அரசியலில் உண்மையான கேம் சேஞ்சர். ஒருவேளை பவன் கல்யாணை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்து கூட என்னுடைய கதாபாத்திரத்தை சங்கர் சார் வடிவமைத்திருக்கலாம் என்று பேசி இருந்தார்.
பவன் கல்யாண் பேச்சு:
அவரைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பவன் கல்யாண், நான் ராம் சரணை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அவர் ஹாலிவுட்டுக்கு சென்றுவிட்டார். ஆஸ்கார் விருதும் வாங்கி விட்டார். அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன். சித்தப்பாவாக இல்லாமல், ஒரு மூத்த சகோதரனாக உன்னை நான் ஆதரிக்கிறேன். நான் அதிகமான திரைப்படங்களை திரையரங்குகளில் பார்க்க மாட்டேன். நான் முன்பு சென்னையில் இருக்கும் போது சங்கர் சாரின் ‘ஜென்டில்மேன்’ படத்திற்கு பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்க்கச் சென்றேன்.
சங்கர் குறித்து:
மேலும், சங்கர் சாரின் ‘காதலன்’ திரைப்படத்தை என்னுடைய பாட்டியுடன் சென்றுப் பார்த்தேன். சங்கர் சார் ஒரு சிறந்த இயக்குனர் என்று பவன் கல்யாண் பாராட்டி பேசி இருக்கிறார். சமீபத்தில் கூட இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமௌலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இந்த படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு, பிரம்மாண்டத்தின் ஒரிஜினல் கேங்ஸ்டர் (OG) சங்கர் தான் என்று பெருமித்துடன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.