போலீஸாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு, அம்பத்தூர் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தார்.

Advertisement

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர், பிரபல ரவுடி பினு. இவர்மீது சூளைமேடு, வடபழனி உள்ளிட்ட சென்னை காவல் நிலையங்களில் பல்வேறு கொலை மற்றும் ஆள்கடத்தல் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்று தலைமறைவாக இருந்துவந்தார். இதனிடையே, கடந்த 6-ம் தேதி மாங்காடு பகுதியில் பினுவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சென்னையின் முக்கிய ரவுடிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், கொண்டாட்ட இடத்துக்கு விரைந்து சென்று 72 பேரை துப்பாக்கி முனையில் கைதுசெய்தனர். சினிமா காட்சிகளையே விஞ்சும் அளவுக்கு ஒரே இடத்தில் 72 ரவுடிகள் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டது, சென்னையில் பரபரப்பை உண்டாக்கியது. இருப்பினும் பிரபல ரவுடி பினு உள்ளிட்டோர் தப்பிச்சென்றனர்.

8 நாள் தலைமறைவுக்குப் பின்னர், அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்வரன் முன்னிலையில் பினு சரணடைந்தார். போலீஸில் அவர் அளித்த வாக்குமூலத்தை வீடியோவாகக் காவல்துறை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பினு பேசியிருப்பதாவது,

Advertisement

என் பெயர் பினு. நான் பொறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை சூளைமேட்டில்தான். எனக்கு 50 வயசு ஆகுது. நான் சுகர் பேஷன்ட். நிறைய ரவுடிகளோட தொடர்பால சிறைத்தண்டனை வாங்கியிருக்கேன். நிறையா அனுபவிச்சிட்டேன். நான் திருந்தி வாழணும்தான் எங்கேயோ ஓடிப்போனேன். இந்த 3 வருஷம் தலைமறைவா இருந்தேன். யாருக்கும் தெரியாம கரூர்ல இருந்தேன். நான் இருந்த இடம் தம்பிக்கு மட்டும் தெரியும். அவன்தான் `உங்க 50 வது பொறந்த நாளை கொண்டாடணும், சென்னை வாங்க அண்ணேன்னு’ சொல்லி வற்புறுத்தினான். 3 வருஷத்துக்குப் பிறகு, வந்தேன்னு எல்லா ரவுடிகளும் என்னைப் பார்க்க வந்தாங்க. எல்லாரும் ஏன் வந்தீங்கன்னு திட்டினேன். கேக் மட்டும் வெட்டு அண்ணே… பார்த்துக்கலாம்’ அப்படின்னு வற்புறுத்தினாங்க. கேக் வெட்டினேன். போலீஸு வந்துடுச்சு. தப்பிச்சு ஓடினேன். இப்போ சரண்டர் ஆகிட்டேன். என்னை மன்னிச்சு விட்டுங்க… நீங்க நினைக்கிற அளவுக்கு நான் பெரிய ரவுடி இல்லீங்க’’ என்று கதறினார்.

Advertisement
Advertisement