`செல்ஃபி எடுத்தது செல்ஃபிஷ் என்றால், நீங்கள் மட்டும் குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றது சுயநலமில்லையா?’ என்று, பிரபல பாடகர் ஜேசுதாஸிடம் சககலைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 1954-ம் ஆண்டிலிருந்து காலம் காலமாக குடியரசுத் தலைவர் தேசிய விருது வழங்குவதுதான் சம்பிரதாயம். அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. விழாவில் `முக்கியமான 11 பேருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் விருது வழங்குவார்.

Advertisement

மற்றவர்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விருது வழங்குவார்’ என அறிவிக்கப்பட்டது. அதாவது மாலை 4 மணிக்கு நடந்த விழாவில் ஸ்மிருதி இரானியும், 5:30 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் விருது வழங்கும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் விருது அறிவிக்கப்பட்ட 141 கலைஞர்களில் 66 பேர், ஸ்மிருதி இரானி கையால் விருதை வாங்க மறுத்து அரங்கைவிட்டு வெளியேறினர்.

குடியரசுத் தலைவர் பங்கேற்ற விழாவிலேயே சர்ச்சை உருவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருது வழங்கும் நாள் குறித்து முடிவுசெய்ய, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் மாளிகையை அணுகும்போதே, `அன்றைய தினத்தில் 11 பேருக்குதான் விருது கொடுக்க முடியும்’ என்று குடியரசுத் தலைவரின் தனிச்செயலர் சஞ்சய் கோத்தாரி தெளிவாகக் கூறியிருக்கிறார். தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக அதிகாரிகள், ஒரு நாளுக்கு முன்னதாக ரிகர்சல் தினத்தில்தான் விருது பெறும் கலைஞர்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் மீது குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் பிரதமர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement

குடியரசுத் தலைவர் கையால் விருது பெற்றவர்களில் நடிகை ஜான்வி (ஸ்ரீதேவி சார்பில் விருது பெற்றார்), இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர் ஜேசுதாஸ் ஆகியோர் முக்கியமானவர்கள். விழாவில் பங்கேற்க டெல்லியில் அசோகா ஹோட்டலிலிருந்து புறப்பட்ட ஜேசுதாஸுடன் இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்துள்ளார். வழக்கமாகவே சில விஷயங்களில் கோபத்தைக் காட்டிவிடும் ஜேசுதாஸ், அந்த இளைஞரிடமிருந்து செல்போனை `டக்’கெனப் பிடுங்கினார். `கோபத்துடன் “செல்ஃபி எடுப்பது செல்ஃபிஷ்” என்றவாறு “முதலில் நீங்கள் எடுத்த படத்தை அழியுங்கள்” என்று ஜேசுதாஸ் கோபத்துடன் கூற, செல்ஃபி எடுத்த இளைஞர் விக்கித்துப்போனார். அத்துடன் இளைஞரிடமிருந்து செல்போனை வாங்கிய ஜேசுதாஸ், செல்ஃபி புகைப்படத்தை தன் கையால் அழித்த பிறகே அங்கிருந்து சென்றார்.

இதற்கிடையே, விருது வழங்கும் விழாவில் எழுந்த சர்ச்சை குறித்து ஜேசுதாஸிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். `இப்படியெல்லாம் இங்கே கேள்வி கேட்க வேண்டாம்’ என்று வாயில் விரலை வைத்து மூடி செய்கை காட்டினார் அவர். செய்தியாளருக்கு அவர் வாய் திறந்து பதில் அளிக்கவில்லை. முன்னதாக, விழாவில் பங்கேற்கும் அனைத்து கலைஞர்களுக்கும் குடியரசுத் தலைவர் தன் கையால் விருது வழங்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகளிடம் 66 கலைஞர்களும் கையொப்பமிட்டு மனு அளித்திருந்தனர். மனுவில் ஜேசுதாஸும் கையொப்பமிட்டிருந்தார். சககலைஞர்கள் புறக்கணித்தபோது, மலையாள இயக்குநர் ஜெயராஜ், ஜேசுதாஸ் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டனர்.

`சககலைஞர்கள் விழாவைப் புறக்கணித்த நிலையில், அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் ஜேசுதாஸ், ஜெயராஜ் போன்றோர் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதைப் பெற்றுக்கொள்வது சுயநலம் இல்லையா?’ என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜேசுதாஸ், `விழாவைப் புறக்கணிக்க வேண்டுமென்று யாரும் முடிவு எடுக்கவில்லை’ என்று பதிலளித்தார். மலையாள இயக்குநர் ஜெயராஜ், `விருது வழங்கும் விழாவைப் புறக்கணித்தவர்கள் ரொக்கப் பரிசைத் திருப்பி அளிக்க வேண்டும்’ என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement